நாடு முழுவதும் பருப்பு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
ஒரு கிலோ பருப்பு ரூபாய் 180 முதல் 210 வரை அதிகரித்து விட்டது. சென்னையில் பருப்பு விலை நாளுக்கு நாள் உயர்ந்த படி உள்ளது. இதற்கிடையே காய்கறி விலையும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மதிய சாப்பாடு, தோசை ஆகியவற்றை தற்போதைய விலையில் வழங்குவதில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கடும் சவாலான நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக ஆனியன் ஊத்தப்பம், ஆனியன் ரவா தோசை போன்வற்றை பல ஹோட்டல்கள் நிறுத்தி விட்டன.
இந்த நிலையில் ஹோட்டல் ஊழியர்களுக்கான சம்பளமும் இந்த மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து லாபத்தில் ஏற்படும் இழப்பை சரி கட்ட உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த சென்னை நகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசித்து வருகிறார்கள்.
அடுத்த மாதம் முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது. மதிய சாப்பாடு, தோசை உள்ளிட்ட உணவு பொருட்கள் விலை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயரும் என்று கூறப்படுகிறது. என்றாலும் இட்லி, காபி, டீ விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரியவந்துள்ளது.