சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழக பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்துக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் வேலூர் மாவட்டம் மூங்கிலேரியைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் (55) எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்துவந்த இந்தியாவைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய கஸ்தூரி முனிரத்தினம் என்ற பெண்ணின் கையை அவரது வீட்டு உரிமையாளர் துண்டித்துள்ளார்.
இச்செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. சவுதி அரேபியாவில் இந்தியருக்கு நேர்ந்த இந்த துயரம் மிகக் கொடுமையானது. இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்செயலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.
சவுதி அதிகாரிகளிடம் இவ்விவகாரம் குறித்து பேசி வருகிறோம். பெண்ணின் கையை துண்டித்த நபர் மீது கொலை குற்றம் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இந்திய அரசாங்கம் தொடர்பில் இருக்கிறது" என்று சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து கஸ்தூரியின் குடும்பத்தினர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "கஸ்தூரி வேலை செய்த வீட்டின் உரிமையாளர் அவரை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனால், கஸ்தூரி அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். இதனை அறிந்த உரிமையாளர் கஸ்தூரியின் வலது கையை துண்டித்துள்ளனர்" என்றனர்.
கதறும் சகோதரி:
"கஸ்தூரியை எப்படியாவது பத்திரமாக என்னிடம் கொண்டுவந்து சேருங்கள்" எனக் கதறுகிறார் அவரது சகோதரி விஜயகுமாரி.
அவர் மேலும் கூறும்போது, "எங்கள் சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தின் மூங்கிலேறி. 3 மாதங்களுக்கு முன்னர்தான் என் சகோதரி சவுதியில் வேலைக்குச் சென்றார்.
ஏஜென்ட் மூலமாகவே அவரை வேலைக்கு அனுப்பினோம். அங்கு சென்ற நாள் முதல் அவர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். சரிவர உணவுகூட தரவில்லை என எங்களிடம் கூறுவார்.
கஸ்தூரி வேலை செய்த வீட்டின் உரிமையாளர் (பெண் உரிமையாளர்) வேலை சரியாக பார்க்கவில்லை எனக் கூறி கஸ்தூரியை பல முறை அடித்திருக்கிறார்.
கடந்த 29-ம் தேதி இரவு கஸ்தூரி அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அப்போது அதை அறிந்த வீட்டு எஜமானி கஸ்தூரியின் வலது கையை துண்டித்துள்ளார். கீழே விழுந்ததில் கஸ்தூரியின் முதுகு எலும்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போது சவுதி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவரை எப்படியாவது இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவந்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு உதவ வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்" எனத் தெரிவித்துள்ளார்.
கனிமொழி கடிதம்:
இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்று உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
அவரை உடனடியாக தமிழகத்துக்கு திருப்பி அழைத்துவர வெளியுறவு அமைச்சகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் இக்கோரிக்கையை நான் முன்வைக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தகவல்:
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறும்போது "ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சவுதி வெளியுறவு அலுவகத்துடன் தொடர்பில் இருக்கிறது.
இச்சம்பவத்துக்கு காரணமானவர் மீது துரித நடவடிக்கை எடுக்குமாறும் கடும் தண்டனை வழங்குமாறும் இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தனி விசாரணை நடத்த வேண்டும், பெண்ணின் கையை துண்டித்த நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்திவருகிறோம்" என்றார்.