கோவை அருகே தினமும் குடித்து விட்டு வந்து ரகளை செய்த கணவரைத் திருத்த, தானும் குடிக்கப்போவதாக டாஸ்மாக் மதுபாரில் அமர்ந்து மனைவி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை அடுத்த கணபதி கே.ஆர்.ஜி. நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜெயக்குமார். இவரது மனைவி லில்லி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜெயக்குமார் தனது சம்பளப்பணத்தை வீட்டில் கொடுக்காமல்,
தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால், ஜெயக்குமார் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.
எனவே, கணவருக்கு சரியான பாடம் புகட்ட முடிவெடுத்தார் லில்லி. அதன்படி, கணவர் தினமும் மது அருந்தப் போகும் பாரை அவர் கண்டுபிடித்தார். அப்போது ஜெயக்குமார், கணபதி அத்திப்பாளையம் பிரிவு அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வழக்கமாக மதுகுடிப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, கணவர் மது குடிக்கும் டாஸ்மாக் பாருக்கு சென்ற லில்லி, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். பெண் ஒருவர் மது பாருக்கு வந்து அமர்ந்திருப்பதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
லில்லியை வெளியே போகும்படி அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ‘என் கணவர் இந்த பாருக்குத் தான் வருவார். நான் அவருடன் சேர்ந்து மது குடிக்கப் போகிறேன்' எனப் பதிலளித்துள்ளார் லில்லி. இந்நிலையில், வழக்கம்போல ஜெயக்குமார், மது குடிப்பதற்காக அதே டாஸ்மாக் பாருக்குள் வந்துள்ளார்.
அங்கே தனது மனைவி லில்லி உட்கார்ந்திருப்பதை பார்த்து ஜெயக்குமார் அதிர்ச்சி அடைந்தார். ‘ஏன் இங்கு வந்தாய்? என மனைவியைப் பார்த்து அவர் கேட்டுள்ளார். அதற்கு லில்லி, ‘எனக்கும் சேர்த்து மது வாங்குங்கள்.
சேர்ந்தே குடிப்போம்' எனத் தெரிவித்துள்ளார். உடனே ஜெயக்குமார் வீட்டுக்கு போகலாம் என்று கூறி மனைவியை அழைக்க, அவரோ, ‘மது குடிக்காதே என்று நான் தினமும் சொல்லியும் நீங்கள் கேட்க வில்லை. அதனால் தான் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்.
ஒரு முடிவு தெரிய வேண்டும் என்று இங்கு வந்தேன்' எனப் பதிலளித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணவன்- மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, லில்லி போலீசாரிடம், ‘தனது கணவரிடம் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை. இதனால் தான் நான் இது போன்ற இடத்துக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது' என விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து போலீசாரிடம் இனிமேல் குடிக்க மாட்டேன் என ஜெயக்குமார் உறுதியளித்தார். உடனே லில்லி போலீசாரிடம், தனது கணவர் ஜெயக்குமார் மீண்டும் மது குடித்து விட்டு வந்தால், நான் இங்கு வந்து போராட்டம் நடத்துவேன் என்றார்.
பின்னர் போலீசார் கணவன்-மனைவி இருவரை யும் சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கணவரின் குடிப்பழக்கத்திற்கு எதிராக மனைவி டாஸ்மாக் பாரிலேயே வந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.