நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாருக்கு எதிரணியில் இருக்கும் விஷாலை 'நீ யார்.. உன் நோக்கம் என்னன்னு தெரியுன்டா' என ஒருமையில் திட்டினார் நடிகர் சிம்பு.
நடிகர் சங்கத் தேர்தல் குறித்து சரத்குமார் அணியைச் சேர்ந்த சிம்பு, ராதிகா ஆகியோர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிம்பு ஆவேசமாகப் பேசினார். தயாரிப்பாளர் சங்கம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.
ஆனால், எந்த ஒரு சமரசமும் வராது என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். மொத்த பிரச்சினையுமே சுமுகமாக முடியக்கூடிய சூழ்நிலையில் இல்லை. அவர்களுடைய (விஷால்) எண்ணமே, இந்த நடிகர் சங்கத்தை உடைக்க வேண்டும் என்பது தான்.
விஜயகாந்த் சார் தலைவராக இருந்த நேரத்தில் என்னுடைய 16 வயதில் இருந்தே நடிகர் சங்கத்தில் இருக்கிறேன். இப்போது சொல்கிறேன், எனக்கு எந்த ஒரு பதவியும் வேண்டாம், நான் இந்த தேர்தலில் நிற்பதாகவே இல்லை. எனக்கு இது தேவையும் கிடையாது.
என்னுடைய நடிகர் சங்க குடும்பத்தில் உடன் இருப்பவர்களே என்னை விரோதி மாதிரி பார்க்கும் பார்வையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு பதவியும், இடமும் எனக்கு தேவையில்லை. ஆனால், சரத்குமார் அணி மீது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.
நடிகர் சங்க கட்டிடம் விவகாரம் தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் சொல்லி அனைவருக்கும் கையெழுத்திட்ட உடனே தான் இந்த முடிவை எடுக்கிறார்கள். என்னுடைய கேள்வி என்னவென்றால், அன்றைய கூட்டத்தில் நீங்க (விஷால்) ஏன் கேள்வி கேட்கவில்லை. அன்றைக்கு நீங்கள் எல்லாம் எங்கு இருந்தீர்கள்.
இன்றைக்கு கேள்வி கேட்பவர்கள் எல்லாம் அன்றைக்கு ஏன் வரவில்லை. ஏன் நடிகர் சங்கத்தின் மீது உங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த கூட்டத்துக்கு ஏன் நீங்கள் வரவில்லை, நடிகர் சங்கத்தை என்றைக்காவது திரும்பி பார்த்திருக்கிறீர்களா?.
கட்டிட இடத்தில் தியேட்டர் வர வேண்டும் என்று சொல்லவில்லை. அங்கு என்ன வேண்டுமானாலும் வரட்டும். திரையரங்கத்துக்கு போட்ட ஒப்பந்தத்தில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லுங்கள்.
அங்கு திரையரங்கம் வரக்கூடாது என்றால் க்ளப் வரணுமா.. பார் வரணும்னு நினைக்கிறியா? உன்னுடைய குறிக்கோள் தான் என்ன? திரையரங்கில் உன்னோட படம் வெளியாகி மக்களிடையே முகம் தெரிவதால் தான் பேசுகிறார்கள் என்பதை உணர வேண்டும்.
திரையரங்கம் இல்லாமல் இவர்களால் பேச முடியுமா? சுற்றி பள்ளிகள் இருக்கிறது என்கிறார்கள், அப்படி என்றால் திரையரங்கம் என்ன டாஸ்மாக்கா? இதுவரை சக நடிகர்களைப் பற்றி தவறாக பேசக் கூடாது என்று அமைதியாக இருந்தேன்.
என்னுடைய நடிகர்கள் குடும்பத்தைப் பற்றி தவறாகப் பேசி இருப்பேனா? நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தால், பூச்சி முருகனிடம் பேசி வழக்கை வாபஸ் வாங்க சொல்லியிருக்க வேண்டும்.
பூச்சி முருகனை வாபஸ் வாங்க விடாமல் வைத்திருப்பது யார்? நான் நடப்பதை எல்லாம் பார்த்து சும்மா இருக்க மாட்டேன். என்னுடைய குடும்பத்துக்குள் பிரிவினை கொண்டுவருவதற்கு இவர்கள் யார்?
கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமாம், எப்படி சொல்ல முடியும்? அவர்கள் கேள்வி கேட்ட என்ன அருகதை இருக்கிறது. சி.சி.எல்லில் கிரிக்கெட் ஆடிய போது அந்த அணியில் சிம்பு கிடையாது.
அப்போது அனைவருமே கேப்டன் என்று தெரியாத்தனமாக அழைத்துவிட்டார்கள். 'விஜயகாந்தை எல்லாரும் கேப்டன் என்று அழைத்தார்கள், நம்மளையும் கேப்டன் என்று அழைக்கிறார்கள்' என நினைத்துவிட்டார். கேள்வி கேட்பதற்கும் ஒரு முறை இருக்கிறது.
ராதாரவி எங்களை திட்டிவிட்டார் என்கிறார்கள். எங்கப்பா கூடத்தான் என்னை திட்டுகிறார். ராதாரவியும் என்னைத் திட்டியிருக்கிறார். மூத்த கலைஞன் என்ற முறையில் நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
நீங்கள் அவரை ரோட்டில் போகும் ஒருவரை போல் நினைப்பதால்தான் தவறாகத் தெரிகிறது. அவர் நாய் என்று திட்டியதா சொல்ற.. ஆனால் நீ நாய் அல்ல நரி மாதிரி வேலை பாக்குறங... உன்னைப் போய் நாய்னு சொல்லிட்டாரே!
இப்போ சொல்றேன்.. நீ யார்... உன் பின்னணி, நோக்கம் என்னன்னு தெரியுன்டா... உன் நோக்கம் நிறைவேற விடமாட்டோம். தனிப்பட்ட முறையில் சரத்குமார் மீது உனக்குக் (விஷாலுக்கு) கோபம் இருக்கிறது. ஆனால், அதற்காக எங்கள் குடும்பத்தை இழுப்பீர்களா?
எங்கள் குடும்பத்தை பிரிப்பீர்களா? எங்கள் குடும்பத்தைப் பார்த்து சிரிக்கிறார்கள். 3500 பேரோட முடிய வேண்டிய விஷயத்தை 7 கோடி மக்களிடம் போய் எனது குடும்பம் சரியில்லை என்று ஏன் சொல்லுகிறீர்கள். எனக்கு அணி எல்லாம் முக்கியமில்லை.
அவர்களுக்கு எதிராக பேசுவதே எனக்கு கேவலமாக இருக்கிறது. எனக்கு என்னைப் பார்த்து எச்சில் துப்புவது போல் இருக்கிறது. அவர்களுக்காக நிற்பவர்கள் ஏதாவது நடக்கும் என்று நினைக்கிறார்கள், ஆனால் செய்வாங்கன்னு நம்புறீங்களா... நிச்சயம் கிடையாது.
அவன் மோசடி பண்றான். நம்பி போய் ஏமாந்துறாதீங்க. அவனோட சூழ்ச்சி வலைல விழுந்துடாதீங்க. 11ம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ஒரு மீட்டிங் நடக்கப் போகுது. இந்த அணி, அந்த அணி என்று நான் பேசவே இல்லை.
மூத்த நடிகர்களில் இருந்து நாடக நடிகர்கள் வரை அனைவருமே வாங்க. இது நம் குடும்பம். இந்த குடும்பத்தோட மொத்த பேரையும் நான் கூப்பிடுகிறேன். தயவு செய்துவாங்க. அரசியலாக்க கூடாது என்று பேசுகிறார்கள், இன்றைக்கு அரசியலாக்கியது யாரு?' விஷால் தான்.
சக நடிகரான தனுஷ் எனக்கு போன் செய்து நடிகர் சங்கம் ஏன் இப்படி செல்கிறது? என்று கேட்கிறார். அதுபோல் சக நடிகர்கள் நடிகைகளும் இப்படி ஏன் நடக்கிறார்கள்? என்று கேட்கிறார்கள். இது எனக்கு அசிங்கமாக இருக்கிறது," என்றார்.