நடிகர் அல்லாத ஒருவர், அதாவது கிச்சா ரமேஷ் தன்னைத் தாக்க வந்ததாகவும், தான் அவரிடம் கெஞ்சியதாகவும், என்ன நடந்தாலும் தேர்தல் நடக்கும் என்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார். காலை முதல் அமைதியாக நடந்து வந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் மதியம் 12 மணியளவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சரத் அணியினருக்கும், விஷால் அணியினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதில், விஷால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மயங்கி விழுந்த விஷாலை உடனடியாக வாக்குச்சாவடியில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
ஆனால் உள்ளே அடிதடி நடக்கவில்லை என்று சரத்குமார் தரப்பு கூறுகிறது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு விஷால் அளித்ததாகக் கூறப்படும் பேட்டியில், ‘தன்னை நடிகர் அல்லாத ஒருவர் தாக்கியதாகத்' தெரிவித்தார்.
அவர் யார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது கிச்சா ரமேஷ் என்று கூறினார். அவர் தன்னைத் தாக்க வந்ததாகவும், நாமெல்லாம் நடிகர்கள் இப்படி மோதக் கூடாது என்று தான் கெஞ்சியதாகவும் விஷால் கூறியுள்ளார்.
மோதலில் விஷாலின் இடது கையில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. விஷாலின் பேட்டியால் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குச்சாவடி அருகே நடிகர் அல்லாத ஒருவர் வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சரத்குமார் அணியைச் சேர்ந்த நடிகர் ராம்கி மறுத்துள்ளார். உள்ளே அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. இரு தரப்பும் அன்பு மிகுதியால் குரல் எழுப்பினர். மற்றபடி மோதல் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.