கோகுல்ராஜ் கொலை வழக்கில் சரணடைந்த யுவராஜை 5 நாள் காவலில் எடுத்தது சிபிசிஐடி போலீஸ். நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியது. ஆனால், சிபிசிஐடி தரப்பில் 15 நாள் காவலுக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.
முன்னதாக, சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் நேற்று மாறுவேடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்து நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.
தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க டீ-சர்ட், லுங்கியுடன் வந்து சரண் அடைந்தார். யுவராஜ் சரண் அடைந்த கடைசி நிமிடம் வரை போலீஸ் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு நிலவியது.
அதைத் தொடர்ந்து, “யுவராஜ், சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தது தொடர்பாக அவர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை சிபிசிஐடி போலீஸார் ஏற்கவில்லை. சரண் அடைந்தது தொடர்பாக எவ்வித அத்தாட்சியும் போலீஸார் வழங்கவில்லை” என யுவராஜின் வழக்கறிஞர் பழ.ஆனந்த் தெரிவித்தார்.
வழக்கு பின்னணி:
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். காதல் விவகாரத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி பள்ளி பாளையம் அடுத்த கிழக்கு தொட்டி பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
அவர் ரயிலில் அடிபட்டு தற்கொலை செய்தி ருக்கலாம் என்ற கோணத்தில் பள்ளிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், கோகுல்ராஜ் உடலை சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து,
அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப் பட்டு திருச்செங்கோடு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை அதிகாரியாக திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா நியமிக்கப்பட்டார்.
கோகுல்ராஜ் கொலை தொடர்பாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில், 20 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். யுவராஜ் தலைமறைவானார். டிஎஸ்பி விஷ்ணு பிரியா கடந்த செப்டம்பர் 18-ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிஎஸ்பி தற்கொலை வழக்கு மற்றும் கோகுல் ராஜ் கொலை வழக்கு ஆகியவற்றை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.