கமல்ஹாசனை ஓவர் டியூட்டி பார்க்க வைத்திருக்கிறது போத்தீஸ் விளம்பரப் படம். தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதற்காக இன்னொரு விளம்பரத்தையும் தயாராக வைத்திருக்கிறார்கள்.
களத்தூர் கண்ணம்மா தொடங்கி 59 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன், இதுநாள் வரையில் ஒரு வணிக விளம்பரத்தில் கூட நடித்தது கிடையாது.
பொதுநலன் கருதி வெளியிடப்படும் விளம்பரங்களில் மட்டுமே நடிப்பதை கொள்கையாக வைத்திருந்த கமல்ஹாசனின் விரதத்தை கலைத்திருக்கிறது போத்தீஸ்.
இது எப்படி சாத்தியமானது? மதுரை போத்தீஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முருகேஷ் இதுபற்றி ‘தி இந்து’விடம் பேசினார். “எப்படியாவது கமல்ஹாசனை எங்கள் விளம்பரப்படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டுமென்று இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்தோம்.
எங்களைப் போல இன்னும் சில பிராண்டுகளும் அவரை அணுகின. ஆனால், நான் கமர்ஷியல் விளம்பரம் பண்றதில்லைன்னு ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார். திடீரென அவர் நடிக்க ஒப்புக் கொண்டது எங்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சி.
அவர் முன்பு ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் காத்திருந்தன. வடநாட்டு பிராண்டுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த போத்தீஸ் நிறுவனத்தை தனது முதல் விளம்பரப் படத்திற்காக தேர்வு செய்தது மறக்க முடியாத நிகழ்வு.
போத்தீஸ் நிறுவனம் நான்காவது தலை முறையாக ஜவுளித் துறையில் இருப்பதால், பாரம்பரியம் என்ற வார்த்தையை விளம்பர ங்களில் பயன்படுத்தி வந்தோம்.
இந்தமுறை அதைத் தவிர்த்துவிட்டு, கமல்ஹாசனு க்கும் எங்களுக்கும் பொருந்துகி றவாறு அபிமானம் என்ற வார்த்தையை முன்னிலைப் படுத்தியிருக் கிறோம்.
இந்த விளம்பரத்தைப் பார்க்கிறவர் களுக்கு கமல்ஹாசன் தனது அடுத்த படத்தைப் பற்றி ஏதோ சொல்லப் போகிறார் என்று தோன்றும். ஆனால், திடீரென அவர் போத்தீஸ் பற்றி பேசுகிறார்.
இந்த விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்னும் சில விளம்ப ரங்கள் வரப்போ கின்றன.
இந்த விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்னும் சில விளம்ப ரங்கள் வரப்போ கின்றன.
வழக்கமாக நாயகர்களுடன் முக்கியமான நாயகிகளும் தோன்றுவார்கள். ஆனால், கமல்ஹாசன் மிகப்பெரிய ஆளுமை என்பதால் மாடலிங் பண்ணுபவர்களைத் தவிர வேறு யாரும் அவரது விளம்பரங்களில் தோன்ற மாட்டார்கள்.”
இந்த விளம்பரப் படங்களை இயக்கியவர் கிருஷ்ணகுமார். ஏற்கெனவே த்ரிஷா நடித்த என்ஏசி ஜூவல்லர்ஸ் விளம்பரத்தையும், தனுஷ் தோன்றிய ஓஎல்எக்ஸ் விளம்பரத்தையும் இயக்கியவர்.
ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த கிருஷ்ணகுமார், மணிரத்னம் தயாரிப்பில் வெளியாகிய பைவ் ஸ்டார் மூலம் நடிகராக அறிமுகமானவர்.
தவிர, ஆய்த எழுத்து, ஆட்டோகிராப் உள்ளிட்ட 22 படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனை இயக்கிய அனுபவம் பற்றி அவரிடம் கேட்டோம்.
விளம்பரத்தில் நடிக்க கமல்ஹாசனை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களா? அல்லது இயக்குநராக கமல் உங்களை தேர்ந்தெடுத்தாரா?
ரெண்டுமே இல்ல. பட்டியல் படத்தில் நடித்து முடித்திருந்த நேரத்தில், விளம்பரத் துறைதான் நமக்கு சரியா வரும் என்ற எண்ணம் உச்சத்திற்கு வந்துவிட்டது. உடனே, விளம்பரத் துறைக்கு வந்துவிட்டேன். நாங்கள் பெரிய நிறுவனங்களை கிளையன்ட் ஆக்க முயற்சிப்போம்.
சில நேரங்களில் பெரிய நிறுவனங்களில் இருந்து அவர்களே அழைப்பார்கள். திருமணத்தைப் போலத்தான், இருவரது வசதி, விருப்பங்களைப் பொருத்து சேர்வதா? வேண்டாமா? என்பது முடிவாகும்.
இப்படித்தான் முன்பு போத்தீஸையும் விளம்பரத்திற்காக அணுகியிருந்தோம். திடீரென அழைத்தார்கள். சினிமாத்துறை யில் பெரிய ஆளை வெச்சி பண்ணப் போறீங்கன்னு சொன்னாங்க.
நித்யா மேனன் விளம்பரத்தில் நடிக்கப் போகிறார் என்று நான் கேள்விப்பட்டிருந்ததால், அவரை வைத்து தான் இயக்கச் சொல்கிறார்கள் போல என்று சந்தோஷமாக ஒப்புக் கொண்டேன். அப்புறம் தான் தெரிந்தது நடிப்பது கமலஹாசன் என்று.
எனக்கு தலைகால் புரியவில்லை. ரெட்டிப்பு சந்தோஷமாகிடுச்சி. அவர் விளம்பரத்துல நடிக்கவே மாட்டார் என்று நினைத்திருந்ததால், அந்த தகவல் உண்மை தானா? என்று ஒன்றுக்கு ரெண்டு முறை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
கமலஹாசன் எவ்வளவு பெரிய லெஜெண்டோ, அதேபோல போத்தீஸ் நிறுவனமும் மிகப்பெரிய லெஜெண்ட். ரெண்டு பேர் காம்பினேஷன்ல பண்றேன்னு துள்ளிக் குதிச்சேன்.
ஏற்கெனவே, மலபார் கோல்டுக்காக இளையராஜா சாரை வைத்து இயக்கியிருக்கிறேன். அதற்கடுத்து எனக்கு கிடைத்த டபுள் ஜாக்பாட் இதுதான். அதனால ஒரே நைட்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக் கொண்டு போய் கொடுத்திட்டேன்.
கமல்ஹாசனை இயக்கிய அனுபவம் பற்றி...
ஒண்ணாங்கிளாசுக்கு ரெண்டாப்பு வாத்தியார் வந்தாலே திகிலா இருக்கும். ஹெட் மாஸ்டரே வந்து பாடம் நடத்தினா எப்படியிருக்கும் அப்படியிருந்துச்சி. பெரிய நடிகர்களிடம் ஒத்துழைப்பை அதிகம் எதிர்பார்க்க முடியாது.
மாலை 5 மணியாகிவிட்டால் சட்டென்று கிளம்பிவிடுவார்கள். அதனால் டென்ஷனும், பயமும் கலந்துகட்டி அடிச்சது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக இருந்தார் கமல்.
ஷூட்டிங் வந்ததும் 5 மணிக்குப் போக வேண்டும் என்று சொன்ன கமல், ரொம்ப இன்வால்வ் ஆகி, படமாக்கப்பட்ட காட்சிகளை எல்லாம் பார்த்தார். இன்னும் ஐந்தாறு காம்ப்ளிகேட்டட் ஷாட்ஸ் இருக்குன்னு தெரிஞ்சதும், அமைதியாக இருந்தார்.
இரவு 8 மணி வரையில் எங்களோடு இருந்து முடிச்சிக் கொடுத்திட்டு த்தான் போனார். எந்தக் காட்சியையும் அவர் மாற்றச் சொல்லலை. வசனங் களையும் திருத்தச் சொல்லலை. தன்னுடைய குரல் மாடுலேஷ னிலேயே கலக்கி விட்டார்.
ஒரு சினிமா பண்ணியிருந்தால் அவரோடு பேசிப்பழக நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கும். 2 நாள் கால்ஷீட்டில் நிறைய பழக வாய்ப்பு இல்லை என்றாலும், அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
உங்க டீமை பற்றிச் சொல்லுங்க...
இந்து தமிழ் நாளிதழ் வெளியான போது, அ, ஆ, என்று ஃ வரையில் தமிழ் எழுத்துக்களையும், அவற்றின் உச்சரிப்பையும் அடிப்படையாக வைத்து ‘உலகம் இனி உங்கள் மொழியில்’ என்ற விளம்பரப்படத்தை எடுத்திருந்தோம். வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.
அந்த விளம்பரத்திற்கு தீபன் ராமச்சந்திரன், பாண்டியன் ராஜ் ஆகியோர் ஸ்கிரிப்ட் எழுதியிருந்தாங்க. அவர்கள் தான் இந்த விளம்பரத்திற்கும் ஸ்கிரிப்ட் எழுதினார்கள். அபிமானம் என்ற வார்த்தையை விளம்பரத்துக்கு தந்தது அவர்கள்தான்.
அதேபோல மும்பையை சேர்ந்த ஜான் ஜேக்கப் ஒளிப்பதிவு செய்தார். புறம்போக்கு படத்தில் ஜெயில் செட் போட்டிருந்த செல்வகுமார் தான் கலை இயக்குநர். இசை ஜிப்ரான். எல்லாம் நல்லா அமைஞ்சது. ஷூட்டிங் நடந்தது சென்னை ஈவிடி ஸ்டூடியோவில்.
அடுத்த விளம்பரம் பற்றி...
‘அபிமானம்’ விளம்பரம் டிரைலர் போலத்தான். இன்னும் சில விளம்பரங்கள் வரவிருக்கின்றன. தீபாவளியையொட்டி கமல்ஹாசன் வருகிற விளம்பரம் அதில் முக்கியமானது. இதில் அவர் நாயகிகளுடன் ஆடிப்பாடுகிற மாதிரியான காட்சி எல்லாம் கிடையாது.
பேட்மேன் படத்தை சிங்கள் டேக்கில் எடுத்திருப்பதைப் போல, இந்த 40 வினாடி தீபாவளி விளம்பரத்தையும் ஒரே டேக்கில் எடுத்துள்ளோம். அந்த விளம்பரத்தை ஒளிப்பதிவு செய்தவர் விஸ்வரூபம் கேமிரா மேன் சானு வர்கீஸ்.