ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி நாடு முழுவதும் 8 லட்சம் கடைகள் அடைப்பு: மருந்து வணிகர்கள் போராட்டம் தொடங்கியது. ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.
40 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருந்து விற்பனையையும் ஆன்லைனில் தொடங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையும் மீறி சில நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி 13-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மருந்துக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மருந்து வணிகர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 8 லட்சம் மருந்துக் கடைகள் நேற்று நள்ளிரவு முதல் அடைக்கப்பட்டன. அவற் றில் பணியாற்றும் 40 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள் ளனர்.
தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் மருந்துக் கடைகளை அடைத்துவிட்டு 2 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 5 ஆயிரம் கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.
இன்று நள்ளிரவு 12 மணி வரை வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதனால், அவசர தேவைகளுக்குகூட மாத்திரை, மருந்துகளை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருந்து வணிகர்களின் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் என்.ராஜ்கணேஷ், இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:
மருந்துக் கடைகள் அடைக்கப் பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. முன்கூட்டியே தேவையான மருந்து களை வாங்கி வைத்துக் கொள்ளு மாறு வாடிக்கையாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தெரி வித்துவிட்டோம். அவர்களும் மருந்துகளை வாங்கி வைத்துக் கொண்டனர்.
இவை தவிர, அம்மா மருந்தகங்கள் திறந்து இருக்கும். அங்கு சென்று மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம். மருந்து என்பது மற்ற பொருட்களைப் போல இல்லை. உயிர் காக்கும் பொருள் என்பதால் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
மருந்துகளை ஆன்லை னில் விற்பனை செய்வது தவறு. மக்களின் நலன், மருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர் களின் குடும்ப வாழ்வாதாரத்தை கருதியே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்காத அரசு, ஆன்லைனில் மருந்து வணிகத்தை அனுமதிப்பதன் மூலம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு பின்புற கதவை திறந்துவிடுவதாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.