'தூய்மை இந்தியா'வுக்காக சேவை வரி 0.5% அதிகரிப்பு!

அனைத்து விதமான சேவைகளுக்கு வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் கூடுதலாக 0.50 சதவீதம் சேவை வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

 

இந்த கூடுதல் வரி மூலம் கிடைக்கும் தொகை தூய்மை இந்தியா திட்டத்துக்காக பயன்படுத்தப்படும். இந்த வரி உயர்வு மூலம் விமானம் பயணம், டிக்கெட் முன்பதிவு, தொலைத்தொடர்பு, உணவகம் உள்ளிட்ட பல சேவைகளுக்கு பொதுமக்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டி இருக்கும். 

இந்த கூடுதல் வரி மூலம் மீதமுள்ள மாதங்களில் மத்திய அரசுக்கு 400 கோடி ரூபாய் கிடைக்கும். தூய்மை இந்தியா வரி என்பது கூடுதல் வரி அல்ல என்று மத்திய நிதிமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக கடந்த ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் சேவை வரி மூலம் 2.09 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. 

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி அதிகரிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி அதிகரிப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ஒரு லிட்டருக்கு 1.60 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசலுகு 0.40 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மறைமுக வரி வருமானத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு இதனை செய்திருக்கிறது. இந்த வரி உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த நான்கு முறை உயர்த்திய போது மத்திய அரசுக்கு கூடுதலாக 20,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. கடந்த நவம்பர் 12, டிசம்பர் 2, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 16 ஆகிய நாட்களில் வரி உயர்த்தப்பட்டது. தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் இந்த வரி மூலமாக மத்திய அரசுக்கு கூடுதலாக 3,200 கோடி ரூபாய் கிடைக்கும். 
Tags:
Privacy and cookie settings