ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு 109 பயணிகள் உயிர் தப்பினர்

ஹைதராபாதில் இருந்து நேற்று மதியம் விஜயவாடாவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், புறப்பட்ட‌ அரை மணி நேரத்தில் தரையிறக்கப்பட்டது. 
 
இதன் காரணமாக தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், உயர் அதிகாரிகள் உட்பட 109 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

ஹைதராபாதில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 3.50 மணிக்கு விஜயவாடா கன்னாவரம் விமான நிலையத்துக்கு 109 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 

புறப்பட்ட அரை மணி நேரத்தில் விமானத்தில் ஏசி பழுதாகி விட்டதால், பயணிகள் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டனர். 

இதனை கவனித்த பைலட், உடனடியாக ஹைதராபாத் விமான தளத்துக்கு தகவல் கொடுத்து, மீண்டும் விமானத்தை தரையிறக்கினார். இதன் காரணமாக பயணிகள் உயிர் தப்பினர். 

முக்கிய பிரமுகர்கள் 

இந்த விமானத்தில் ஆந்திர மாநில தலைமை செயலாளர் கிருஷ்ணா ராவ், புலனாய்வு துறை கூடுதல் போலீஸ் ஆணையர் வெங்கடேஸ்வருலு, தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் போண்டா உமா மகேஷ்வர ராவ், சித்தமனேனி பிரபாகர், 

 

வேணுகோபால ரெட்டி உட்பட மொத்தம் 109 பயணிகள் பயணம் செய்தனர். தாங்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

அதன்பின்னர் மாற்று விமானத்தில் இவர்கள் அனைவரும் விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலைய‌ அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:
Privacy and cookie settings