'ஆரம்பம்' படத்தின் போது காலில் பட்ட அடிக்காக, நவம்பர் 24ம் தேதி அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருக்கிறார் அஜித். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தின் படப்பிடிப்பின் போது அவருக்கு காலில் அடிபட்டது.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்கள். ஆனால், அஜித் தான் ஒப்புக் கொண்ட இயக்குநர் சிவா படத்தை முடித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ள தீர்மானித்தார்.
இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவான 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பிலும், அஜித்துக்கு அடிப்பட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள், உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 24ம் தேதி அஜித்துக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. அவருடைய வலது காலிலும், தோள் பட்டையிலும் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார்கள். அறுவை சிகிச்சை முடிந்தவுடன், சுமார் 3 மாதங்கள் ஒய்வு எடுக்க இருக்கிறார் அஜித்.
அதனைத் தொடர்ந்தே அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அவருடைய அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது.