பாலியில் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிபிஐ குழுவினரால் டெல்லி கொண்டுவரப்பட்டார். சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த அவரை அதிகாரிகள் சிபிஐ தலைமையகத்துக்கு கொண்டு சென்றனர்.
இதனால், விமான நிலையத்திலிருந்து சிபிஐ அலுவலகம் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த 27 வருடங்களாக மும்பை போலீஸாரால் தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதாவான சோட்டா ராஜனை இந்தியா கொண்டு வர சிபிஐயின் குழுவினர் பாலி சென்றிருந்தனர்.
இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின் நேற்று பாலியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ராஜன், இன்று விடியற்காலை சுமார் 5.30 மணிக்கு டெல்லி அடைந்தார். இவரை சிபிஐயின் தலைமை அலுவலகம் அழைத்து செல்லும் பொருட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ராஜனின் பரம விரோதியான மற்றொரு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்தபடி தன் கிரிமினல் நடவடிக்கைகளை இந்தியாவில் செயல்படுத்தி வரும் தாவூதின் ஆட்கள் இந்தியாவிலும் பரவி உள்ளனர். இதனால், ராஜனின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதபடி விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வருவது டெல்லி போலீஸாருக்கு சவாலாகி விட்டது.
இதற்காக ஒருநாள் முன்னதாக டெல்லியின் பாலம் பகுதியின் விமான நிலையத்தில் இருந்து, சிஜிஓ காம்ப்ளக்ஸ், லோதி சாலையில் உள்ள சிபிஐயின் தலைமை அலுவலகம் மற்றும் டெல்லியின் சிறப்பு காவல்துறை அலுவலகம் என இரண்டு பாதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
இவை, இரண்டிலும் சி.ஐ.எஸ்.எப் மற்றும் சி.ஆர்.பி.எப் ஆகிய மத்திய பாதுகாப்பு படைகளுடன் டெல்லி போலீஸாரும் சாலை நெடுக ஆங்காங்கே காவல் இருந்தனர். இதனால், டெல்லி இறங்கும் ராஜன் கொண்டு செல்லப்படும் இடம் கடைசிவரை ரகசியமாக வைக்கப்பட்டது.
இத்துடன், தாவூதின் ஆட்களை குழப்ப வேண்டி சோட்டா ராஜன் போலவே தோற்றத்தில் ஒற்றுமையாக இருந்த ஒருவரையும் தேர்ந்தெடுத்து பாதுகாப்பிற்காக வேண்டி ‘டம்மி’யாக பயன்படுத்தப்பட்டிருந்தது.
பாலம் விமான நிலையத்தில் இருந்து வெளிக் கொண்டுவரப்பட்ட ராஜன், சுமார் 25 நிமிடப் பயணத்தில் சிபிஐ தலைமையகம் அடைந்தார். குண்டு துளைக்காத அம்பாஸிட்டர் காரில் அழைத்து வரப்பட்டவருக்கு பாதுகாப்பாக டெல்லியின் ‘ஸ்வாட்’ எனும் சிறப்பு படையினரின் 15 வாகனங்கள் முன்னும், பின்னுமாக தொடர்ந்தன.
சிபிஐ முதல் தளத்தில் உள்ள விசாரணைக் கைதிகளின் சிறையில் வைக்கப்பட்ட ராஜனுக்கு முதல் கட்டமாக மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுவதால், அதற்கான சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதன் பிறகு அவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கு ஒன்றை பதிவு செய்து ராஜனை சிபிஐ நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூமியை முத்தமிட்டு வணங்கிய ராஜன்
ராஜேந்திரா சதாசிவ நிகல்ஜி எனும் இயற்பெயர் கொண்ட 55 வயது சோட்டா ராஜன் மீது மும்பை உட்பட பல நகரங்களில் 20 கொலை வழக்குகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
சர்வதேச காவல்துறையாகக் கருதப்படும் இண்டர்போல் அமைப்பாலும் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராஜன், கடந்த சில வருடங்களாக மோஹன்குமார் எனும் பெயரிலான போலி பாஸ்போர்ட் உதவியால் ஆஸ்திரேலியாவில் மறைந்திருந்ததாகக் கருதப்படுகிறது.
இங்கிருந்து கடந்த அக்டோபர் 25-ல் இந்தோனேஷியாவில் உள்ள சுற்றுலா தலமான பாலிக்கு வந்திருங்கியவர் அந்நாட்டு போலீஸாரால் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
பிறகு அவர்களை தொடர்பு கொண்ட இந்திய அரசு, ராஜனை டெல்லிக்கு வரவழைத்துள்ளது. டெல்லியின் விமான நிலையத்தில் இறங்கிய சோட்டா ராஜன், ஒரு பெருமூச்சுடன் தன் காலடியின் நிலத்தை முத்தமிட்டு வணங்கினார்