ஷாருக் கானிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை!

1 minute read
ஐபிஎல் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பங்குகளை விற்றதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், இந்தி நடிகர் ஷாருக் கானிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக, தெற்கு மும்பையில் பல்லார்டு எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள மண்டல தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை ஷாருக் கானுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

இதன்படி காலையில் ஆஜரான அவரிடம் அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தை மீறி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் (கேஆர்எஸ்பிஎல்) பங்குகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்ததாகவும் பங்கு விற்பனை தொடர்பான சில ஆவணங்களை வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பங்கு பரிவர்த்தனையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், பங்குகள் விற்பனை செய்யப்பட்ட பிறகே அதன் விலை உயர்ந்ததாகவும் ஷாருக் கான் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஷாருக் கான், நடிகை ஜூகி சாவ்லா மற்றும் அவரது கணவருக்கு சொந்தமான கேஆர்எஸ்பிஎல் பங்குகள், 2009-ம் ஆண்டில் மொரீஷியஸில் உள்ள சீ ஐலேண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (எஸ்ஐஐஎல்) நிறுவனத்துக்கு (ஜூகி சாவ்லா கணவர் ஜெய மேத்தாவுக்கு சொந்தமானது) விற்பனை செய்யப்பட்டது.

இந்த பரிவர்த்தனையின்போது, பங்குகளின் விலை அப்போது நிலவிய சந்தை நிலவரத்தைவிட 8 முதல் 9 மடங்குவரை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது ஒரு பங்கின் விலை ரூ.70 முதல் ரூ.86 வரை நிலவிய நிலையில், ரூ.10-க்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:
Today | 16, April 2025
Privacy and cookie settings