ஐதராபாத்தில் உள்ள தில்சக் நகரில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு லிப்ட் வசதியும் இருக்கிறது.
இப்பள்ளிக்கூட ஆசிரியை நர்சரி பள்ளி மாணவ – மாணவிகள் சிலரை முதல் தளத்தில் இருந்து 3–வது தளத்திற்கு அழைத்து செல்ல லிப்ட் அருகே நேற்று காலை வந்தார்.
ஆசிரியை உள்பட மாணவ – மாணவிகள் புத்தக பைகளுடன் முண்டியடித்து கொண்டு லிப்டில் ஏறினர். கடைசியாக சயீதா பாத்திமா என்ற 4 வயது சிறுமி லிப்டில் நுழைந்தார்.
அதற்குள் யாரோ ஒருவர் பட்டனை அழுத்தி உள்ளனர். இதனால் கதவு தானாக மூடியது. இதில் அந்த சிறுமியின் தலை, கை லிப்டுக்குள் சிக்கி துடிதுடித்தாள்.
இதை கண்ட ஆசிரியையும், உடன் வந்த மாணவ–மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஆசிரியை பட்டனை அழுத்தி லிப்டை நிறுத்தினார்.
அதற்குள் அந்த சிறுமி தலை நசுங்கி அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக் கூடத்தின் முன்பு கூடினர்.
அஜாக்கிரதையாக இருந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாக பள்ளிக்கூட நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து
இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுமியின் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
சிறுமியின் சாவுக்கு காரணமான பள்ளிக்கூட முதல்வர் ஷாலினி, ஆசிரியை சரோஜா ஆகியோரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். பள்ளிக்கூடம் நேற்று இழுத்து மூடப்பட்டது.