மாதவிடாய் காலத்தில் காட்டில் விடப்படும் பெண்கள் !

மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு காட்டில் தங்க வைக்கப்படுவதால் பெண்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி வரும் சம்பவ மொன்று இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இடம்பெற்று வருகிறது.
 

இந்த கம்பியூட்டர் யூகத்திலும் இந்தியாவின் கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்துக்குட்பட்ட அரசிகெரே தாலுகாவிலுள்ளது கோபாலபுரம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் நிலவும் மூட நம்பிக்கையின் உச்சமே இந்த சம்பவம் என்று கூறலாம். 

நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகர் பெங்களூரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் தான் இந்த கிராமம் உள்ளது. இருந்த போதிலும், கிராம மக்களுக்கு இன்னும் அடிப்படை நாகரீகமே சென்று சேரவில்லை என்று கூறப்படுகின்றது.

இக்கிராமத்தில் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. மாதவிடாய் காலங்களில் கிராமத்திலுள்ள பெண்கள் வேறு யாரையும் தொட்டால் தீட்டு என்ற எண்ணம் அங்கு வேரூன்றி போயுள்ளது.

இதனால் மாதவிடாயின் போது மாதத்தின் சில நாட்கள், வீட்டில் பெண்கள் தங்க அனுமதிக்கப் படுவதில்லை. அருகேயுள்ள வயல்வெளிகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர். அங்கும் கூட மிகவும் இழிவான நிலையில் தான் வாழ வேண்டும் என்பது கட்டாயம்.

கீழே படுத்திருக்க வேண்டும், ஒரே குவளையில் சாப்பாட்டையும், குழம்பையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பது போல கட்டுப்பாடுகள் பல உள்ளன. 

வயல் வெளிகளில் பாம்புகள், பூரான்களுக்கு நடுவே அச்சத்துடனேயே வாழ்க்கையை கழிக்கின்றனர் அந்த பெண்கள். விஷ ஜந்துகள் கடிப்பதால், தோல் வியாதியுடன் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். 

இந்த வேதனையை தாங்க முடியாமல், குறைந்த வயதிலேயே கர்ப்பப்பையை அகற்றி விடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், செய்தியின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் ஹாசன் மாவட்ட கலெக்டர்.

வேலூரை பூர்வீகமாக கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியான அன்புகுமார் தான் தற்போது, ஹாசன் மாவட்ட அரசாங்க அதிபர் இது குறித்து கூறியதாவது,

“கன்னட மீடியாவில் இச்சம்பவம் குறித்து இன்று ஒளிபரப்பான செய்தியை பார்த்த பிறகுதான் இந்த விநோத பழக்கம் குறித்த தகவல் எனக்கு கிடைத்தது.

உடனடியாக தாசில்தாரை சம்மந்தப்பட்ட கிராமத்துக்கு அனுப்பி வைத்து கள நிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கையளிக்க உத்தர விட்டுள்ளேன். நானும் கூடிய விரைவில் அக்கிராமத்துக்கு செல்ல உள்ளேன். 

மேலும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவே, இந்த பழக்கத்தை கைவிடச் செய்ய முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் பிரச்சினையின் தீவிரம் அதிகரித்து விடும்.

இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு குழுவை அமைத்து, மாதாமாதம் அந்த குழு சோதனை நடத்த உத்தரவிடப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings