நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவுசார் சமூகத்தின் பங்களிப்பு கணிசமானது. வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகையோர் அதிகமிருப்பது கண்கூடு.
ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளைச் சேர்ந்தவர்களால் அந்நாடுகள் முன்னேறியுள்ளனவா என்று கேட்டால் அத்தகைய கேள்விக்கு விடை கிடைக்காது.
ஏனென்றால் பிற நாடுகளிலிருந்து வந்து சேர்ந்த அறிவுசார் மக்களின் பங்களிப்பு வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகம். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
அறிவுசார் சமூகம் இந்தியாவிலிருந்து வெளியேறுவது குறித்து அவ்வப்போது ஆட்சியாளர்கள் கவலைப்படுவர். ஆனால் அவர்களை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைத்தான் எடுப்பதில்லை.
கடந்த செப்டம்பரில் சிலிக்கான் பள்ளத்தாக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலிருந்து வெளியேறுவோர் (பிரைய்ன் டிரெய்ன்) இந்தியா திரும்பு வதற்கான காலம் கணிந்து வருகிறது என்றார்.
இந்தியாவிலிருந்து வெளியேறி வளர்ச்சியடைந்த நாடுகளில் குடியேறி யுள்ள அறிவுசார் இந்தியர்களின் எண்ணிக்கை 36 லட்சமாகும்.
2000-வது ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் இது 83 சதவீதம் அதிகம். அதாவது கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவிலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது.
அதிகம் படித்த அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. வெளிநாடு களில் குடியேறிய அறிவு சார் சமூகத்தின் எண்ணிக்கை மொத்தம் வெளியேறியவர்களில் 62 சதவீதமாகும்.
பிற ஆசிய நாடுகளிலிருந்து வளர்ச்சி யடைந்த நாடுகளில் குடியேறியவர் களோடு ஒப்பிடுகையில் இந்தியா விலிருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கைதான் அதிகம். சிங்கப்பூர் (55.8%), பிலிப்பைன்ஸ் (52.3%), சீனா (43.8%) என்ற அளவில் உள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் குடியேறியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 22 லட்சமாகும். இந்தி யாவுக்கு அடுத்தபடியாக அதிக அறிவுசார் சமூகத்தை இழந்த நாடு மெக்சிகோ.
இங்கிருந்து 12 லட்சம் பேர் வெளியேறி வளர்ச்சியடைந்த நாடுகளில் குடியேறியுள்ளனர். அறிவுசார் சமூகத்தில் 100 பேரில் 3 பேர் உயர் படிப்பு மற்றும் வேலைக்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் குடியேறி யுள்ளனர்.
அதேசமயம் டாக்டர்கள், நர்சுகளின் எண்ணிக்கை மிக அதிகம். 100 பேரில் 8 பேர் இந்திய டாக்டர்களாக உள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் 86 ஆயிரம் இந்திய டாக்டர்கள் புரிவ தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்த இடத்திலிருக்கும் சீனா விலிருந்து வெளியேறிய டாக்டர்களின் எண்ணிக்கை 26 ஆயிரமாகும்.
அதே சமயம் இந்திய செவிலியர்கள் (நர்சுகளின்) எண்ணிக்கை 70,471 ஆக உள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களை உருவாக்கும் நாடு இந்தியாதான். ஆனால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
ஏற்கெனவே இந்தியாவில் சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தியாவில் 1,800 பேருக்கு ஒரு டாக்டர் உள்ள நிலையில் இதுபோன்று டாக்டர்கள் அதிக எண்ணிக்கையில் வெளியேறுவது மனித வளத்தையும் பாதிக்கும்.
பெரும்பாலும் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, சிலி, செக். குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கொரியா, லக்ஸம்பர்க், மெக்சிகோ, நெதர்லாந்து,
நியூஸிலாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுக்கீசு, ஸ்லோவோக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 34 நாடுகளுக்கு (ஓஇசிடி நாடுகள்) இந்தியர்கள் செல்கின்றனர்.
இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் செல்கின்றனர். இந்தியாவிலிருந்து அறிவுசார் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அந்நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்று சர்வதேச பொருளாதார அறிஞர் கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் இத்தகைய அறிவுசார் மக்களின் திறமைக்கேற்ற வேலை இந்தியாவில் கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்தமான சூழலாகும்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய அறிவுசார் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது நமக்கு சாதகம் என்று மோடி குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திரும்பினால்தான் சாதகம். அதற்கான காலம் எப்போது உருவாகும்?