ரஷ்யாவில் பிரதமர் மோடி நவாஸ் ஷெரீப்புடன் பேச்சு

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
 
மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ரஷ்யாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் சென்ற மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்று கஜகஸ்தான் அதிபர் நூர் சுல்தானை சந்தித்த மோடி, வர்த்தகம், பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். இதையடுத்து, 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

கஜகஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யா சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படது.

இதையடுத்து உஃபா நகரில் நடந்த மாநாட்டில் மோடி பங்கேற்றார்.ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து மோடி பேசினார். இருதரப்பு உறவுகள், ஷாங்காய் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக சேர்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.


சர்வதேச யோகா தினத்துக்கு ரஷ்யா ஆதரவு அளித்ததற்காக மோடி நன்றி தெரிவித்தார். ரஷ்ய அதிபர் சந்திப்புக்கு பின் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மோடி சந்தித்து பேசினார். இருநாட்டு உறவுகள் குறித்து இருவரும் பேசினர்.

மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய லக்வியை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த விவகாரத்தில் ஐ.நா.சபையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா நடந்து கொண்டது. இதுகுறித்து இந்தியா கவலை அடைந்ததாக சீன அதிபரிடம் தெரிவித்தார் மோடி. 

இந்தியா- சீனா இடையேயான எல்லை பிரச்னை, வர்த்தகம் உள்ளிட்டவை குறித்தும் இருவரும் பேசினர். கடந்த ஓராண்டில் 5வது முறையாக சீன அதிபரை, பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரிக்ஸ், ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் மோடி சந்திக்கிறார். இருநாட்டு உறவுகள், அமைதி பேச்சுவார்த்தை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.
Tags:
Privacy and cookie settings