இங்கிலாந்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் உள்ள வெம்ப்ளி மைதானத்தில் மோடி நேற்றுமுன்தினம் இரவு பேசுகையில், ‘‘ஆல்வாரில் உள்ள இம்ரான் கான் போன்றவர்களால்தான் என் இந்தியா நிலைத்து நிற்கிறது’’ என்று பெருமையாகப் பேசினார்.
அதன்பின், மோடி குறிப்பிட்ட அந்த இம்ரான் கான் யார் என்று பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் கான் (34). அரசு பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக பணிபுரிகிறார்.
இவர் தனியாக இணையதளம் தொடங்கி உள்ளார். அதில் தன்னை, செயலி வடிவமைப்பாளர்(ஆப் டெவலப்பர்) என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். பள்ளி மாணவர்கள் எளிமையாக பாடங்களை புரிந்து கொள்ளும் வகையில் புதிய புதிய ‘ஆப்’களை உருவாக்கி வருகிறார்.
கணினி பற்றிய போதிய பயிற்சி எதுவும் இவருக்கு இல்லை. ஆனால், தனது சகோதரரின் பொறியியல் கல்விக்கான புத்தகங்களை நன்கு படித்து அதன் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார். அதன் மூலம் தான் பணிபுரியும் பள்ளிக்காக முதலில் ஒரு ஆப் தயாரித்தார்.
அதன்பின், பள்ளி மாணவர்களுக்கான புதிய ஆப்களை உருவாக்குவதை பொழுதுபோக்காக செய்து வருகிறார். இதுவரை 52 கல்வி ஆப்களை உருவாக்கி உள்ளார் இம்ரான் கான். அவை அனைத்தையும் மாணவர்களுக்கு இலவசமாக அர்ப்பணித்துள்ளார்.
அவற்றில் மாணவர்களுக்காக இந்தியில் உருவாக்கி உள்ள பொது அறிவியல் ஆப் மிகவும் பிரபலமானது. இந்த ஆப் இதுவரை 5 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 1.8 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். சமஸ்கிருத ஆசிரியராக உள்ள இம்ரான் கானுக்கு பணம் ஒரு முக்கிய பொருட்டே இல்லை.
இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில், ‘‘வாழ்க்கையில் பணம் மட்டுமே எல்லாமாகி விடாது. ஏனெனில் யாருக்காக நான் ஆப்களை உருவாக்கினேனோ அவர்களால் பணம் கொடுத்து அவற்றை வாங்க முடியாது. எனவேதான், இலவசமாக கொடுத்து விட்டேன்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இம்ரான் கானை போன்றவர்களால்தான் இந்தியா இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடியும் தனது உரையில் குறிப்பிட்டதால், ஒரே நாளில் அவர் மிகவும் புகழ்பெற்று விட்டார்.
எனினும், புகழை எதிர்பார்த்து எல்லாம் இதுவரை அவர் ஆப்களை உருவாக்கவில்லை. மாணவர்களின் நலனுக்காக பிராந்திய மொழிகளில் இன்னும் பல ஆப்களை தொடர்ந்து உருவாக்குவேன் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் இம்ரான் கான்.
இவரது பணியை கவுரவிக்கும் வகையிலும், புதிய ஆப்களை கண்டுபிடிக்கவும் இம்ரான் கானுக்கு இலவச இணையதள இணைப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.