ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லலித் மோடிக்கு எதிராக இன்டர்போல் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று அமலாக்கத் துறை வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின்போது நிதி முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி லண்டனில் தங்கி உள்ளார்.
அவர் இந்தியாவுக்கு வந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பு தெரிவித்து வருகிறார். இதையடுத்து அவருக்கு எதிராக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்துள்ளது.
எனவே, அவருக்கு எதிராக இன்டர்போல் நோட்டீஸ் வழங்குமாறு கோர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை அமலாக்கத் துறை தலைமை அலுவலகம் சிபிஐக்கு அனுப்பி வைத்துள்ளது. இதைப் பரிசீலித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஐ தலைமை அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இன்டர்போல் தொடர்பான விவகாரங்களை சிபிஐ கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.