தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை இனி படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறும்போது, "தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆந்திராவுக்கு நகர்வதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னை, வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், அடுத்த தகவல் வரும் வரையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்றார் ரமணன்.
அதிகரிக்கும் மழை...
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, இப்பருவமழை காலத்தில் இயல்பைவிட அதிகமாக மழை கிடைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறும்போது, "கடந்த 2004 முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மழைப் பொழிவு இயல்பை விட அதிகமாகவே இருந்தது. 2005-ம் ஆண்டில், 79 சதவீதம் மழை அதிகரித்து இருந்தது. 2012-ல் 16 சதவீதம், 13-ல் 33 சதவீதம் கடந்த ஆண்டில் 2 சதவீதம் பற்றாக்குறையாக மழை பெய்தது.
இந்த ஆண்டில் தற்போது வரை 34 செ.மீ. மழை கிடைத்துள்ளது. வரும் நாட்களில் உருவாகும் நிகழ்வுகள் மூலம் மழை அதிகரிக்கும்" என்றார்.