போர், பூசல் மற்றும் பிற காரணங் களால் இறந்த வீரர்களுக்கு அவர்கள் நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்வது சங்க காலம் முதல் தமிழரிடையே காணப்படும் வழக்கம்.
அதுபோல நிரை கவர்தல், மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால் இறந்த கணவருடன் உடன்கட்டை ஏறிய மனைவிக்கு அமைக்கப்பட்ட நடுகல்லின் மேல் எழுப்பப்படும் கோயில் மாலைக்கோயில் எனப்படும்.
மேலும் மாலைக் கோயில்கள் பற்றி ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மாலைக்கோயிலில் அமைக்கப் படும் நடுகல் சிற்பத்தில் கணவரு டன் மனைவி இருப்பது போன்று அமைக்கப்படும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவர் என்பதைக் காட்ட சிலையில் அவரது கையை உயர்த்தி இருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும்.
கையில் வளையல் போன்ற அணிகலன்கள் அணிந்தவளாக அப்பெண் காணப்படுவார். மனைவியின் உருவம் வீரனின் உருவத்தைவிட சிறியதாகவோ கைகள் மட்டுமோ அமைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.
இத்தகைய நடுகல்லை குடும்பத்தினருடன் ஊராரும் கோயிலாக அமைத்து வழிபட்டு வருவது வழக்கம். இதை மாலையீடு, மாலையடி, தீப்பாய்ஞ்ச அம்மன் கோயில், மாலைக்காரி, சீலைக்காரி அம்மன் கோயில் என்றும் அழைப்பர்.
இறந்த மனிதரின் உருவத்தை கல்லில் வடிக்கும்போது அவ்வுரு வத்துக்குக் காது, கழுத்து, கை, கால் போன்ற உறுப்புகளில் ஆபரணங்கள் அணிவித்தும் தலையில் அழகான கொண்டையை செதுக் குவதும் இருந்துள்ளது.
தீயில் பாய்ந்து உயிர்விடுவது போன்று சிற்பம் செதுக்கும் முறை நடுகல்லில் இல்லை. கிழவன் சேதுபதி மன்னர் இறந்தபின் அவரின் 47 மனைவியரும் அவருடன் உடன்கட்டை ஏறியதாக வரலாறு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நரிப்பையூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மூன்று மாலைக்கோயில்களில் ஒன்று பாண்டியர் காலத்தை சேர்ந்தது. மற்றவை விஜயநகர நாயக்கர் காலத்தை சேர்ந்தவை ஆகும். இவை மூன்றும் வழிபாட்டில் இல்லை.
சாயல்குடி அருகே கொக்க ரசன்கோட்டை என்ற ஊரில் பஸ் நிறுத்தம் அருகில் ஒரு மாலைக்காரியம்மன் கோயில் உள்ளது. 18-ம் நூற்றாண்டில் இவ்வூரில் வசதி வாய்ப்புடன் இருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், குதிரையில் வந்தபோது இடறி விழுந்து இறந்துவிட்டார்.
அவருடன் அவர் மனைவியும் உடன்கட்டை ஏறினார்.இதனால் அப்பெண்ணின் விருப்பப்படி அவருடைய வம்சாவளியினர் இக்கோயிலைக் கட்டி தற்போதும் வழிபாட்டில் உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்றுத் தொன்மையான உடன்கட்டை ஏறிய பெண்க ளுக்கு அமைக்கப்பட்ட மாலைக்கோயில் களை அரசும், பொதுமக்களும் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்றார்.