சிம்ரனை அடிக்க தயங்கினேன்: இனியா !

சிம்ரன், இனியா, நிகிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கரையோரம்’. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் இனியா, நிகிஷா, படத்தின் இயக்குனர் ஜே.கே.எஸ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘கரையோரம்’ படம் பேய் படம் என்று கூறிவருகிறார்கள்.

ஆனால், இது பேய் படம் அல்ல. இது ஒரு க்ரைம் திரில்லர் படம். படத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திரில் இருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

வருகிற 27ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்றார். இனியா கூறும்போது, ‘இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறேன். கிளைமாக்ஸில் என்னுடைய கதாபாத்திரத்தில் திருப்பம் அமைத்திருக்கிறார்கள்.
சீனியர் நடிகர் சிம்ரனுடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. கிளைமாக்ஸில் எனக்கும் சிம்ரனுக்கும் சண்டைக் காட்சி இருக்கிறது. இந்த சண்டைக் காட்சியில் சிம்ரனை அடிக்க மிகவும் தயங்கினேன்.
ஆனால், சிம்ரன் என் தயக்கத்தை போக்கி நடிக்க வைத்தார். கேமராவிற்குப் பின் சிம்ரன் வேறுமாதிரியாகவும், கேமராவிற்கு முன் அனுபவம் வாய்ந்த நடிகையாகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

‘கரையோரம்’ படம் மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. மூன்று மாநிலத்திலும் எனக்கு நல்ல பெயர் சொல்லும் படமாக இப்படம் அமையும். இப்படத்தை தவிர மலையாளப் படத்திலும் நடித்து வருகிறேன்’ என்றார்.
Tags:
Privacy and cookie settings