அஜீத், சிம்ரன், ஜோதிகா நடித்த வாலி படத்தில் இயக்குனரானவர் எஸ்.ஜே.சூர்யா. அதையடுத்து விஜய்-ஜோதிகா நடிப்பில் குஷி என்ற சூப்பர் ஹிட் படத்தையும் இயக்கியவர் அப்படத்தை தெலுங்கு, இந்தியிலும் ரீமேக் செய்தார்.
அதையடுத்து அவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் தயாராக இருந்தபோதும் திடீரென்று தானும் ஹீரோவாகி விட்டார் எஸ்.ஜே.சூர்யா.
அப்படி அவர் நடித்த நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி, கள்வனின் காதலி, நியூட்டனின் மூன்றாம் விதி ஆகிய படங்களில் நடித்தார். அதை அடுத்து புலி என்ற டைட்டீலில் ஒரு படத்தை இயக்கி, நடிக்கயிருந்தவர் மார்க்கெட் சரிந்ததால் அந்த படத்தை தள்ளி வைத்திருந்தார்.
அதன்பிறகு சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகே விஜய் நடித்த நண்பன் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, சில படங்களில் நடித்து வந்தவர் தனது ஹீரோ மார்க்கெட்டை மறுபடியும் நிறுத்திக்கொள்ளும் முயற்சியாக இசை என்ற படத்தை இயக்கி, தயாரித்து,
இசையமைத்து நடித்தார். ஆனால் அந்த படமும் தோல்வியடைந்து விடவே, இப்போது டைரக்சனில் இருந்து விலகி முழுநேர நடிகராகி விட்டார் எஸ்.ஜே.சூர்யா.
அந்த வகையில், வை ராஜா வை, யட்சன் படங்களுக்குப் பிறகு இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இறைவி படத்தில் ஒரு அதிரடியான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
இதே படத்தில் விஜயசேதுபதி, பாபி சிம்ஹாவும் நடித்தபோதும், எஸ்.ஜே.சூர்யாவின் வேடம் ரொம்ப வித்தியாசமானதாம். மேலும், அவரை வில்லனாக காண்பித்தபோதும் அவர் அப்படி மாறுவதற்கான காரணத்தை அதிக உருக்கமாக சொல்லியிருக்கிறாராம் இயக்குனர்.
அந்த காட்சிகளில் இதுவரையில்லாத உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா, படப்பிடிப்பு தளத்தில் வேடிக்கை பார்த்தவர்களையே கண்கலங்க வைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறாராம்.
அதனால் இந்த இறைவி அடுத்து தனது நடிப்பு கேரியரை வலுப்படுத்தும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறாராம் அவர்.