ஜனாஸாவைக் கபனிடல் !

குளிப்பாட்டிய பின் துணியால் உடலை மறைக்க வேண்டும். இதை கஃபன் என்று மார்க்கம் கூறுகிறது. கஃபன் என்றால் அதற்கென குறிப்பிட்ட சில வகைகள் உள்ளதாக மக்கள் நம்புகின்றனர். 

சட்டை, உள்ளாடை, வேட்டி, மேல்சட்டை, தலைப்பாகை, பின்னர் முழு உடலையும் மறைக்கும் துணி இப்படி இருந்தால் தான் அது கஃபன் என்று நினைக்கிறார்கள். 

அது போல் பெண்களின் கஃபன் என்றால் அதற்கென சில வகை ஆடைகளை நிர்ணயம் செய்து வைத்துள்ளனர். கஃபன் இடுவதற்கு இப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. 

உடலை மறைக்க வேண்டும் அவ்வளவு தான். உள்ளே எதையும் அணிவிக்காமல் உடலை ஒரு போர்வையால் போர்த்தி மறைத்தால் அதுவும் கஃபன் தான். 

அதுவே போதுமானதாகும். அது போல் ஒருவர் வாழும் போது அணிந்திருந்த சட்டை, கைலியை அணிவித்தால் அதுவும் கஃபன் தான். 

அதே நேரத்தில் மேற்கண்டவாறு சட்டை, உள்ளாடை என்று கஃபனிட்டால் அது நபிவழி என்ற நம்பிக்கையில்லாமல் நம்முடைய திருப்திக்காகச் செய்தால் அதில் தவறில்லை.

பின் வரும் தலைப்புகளில் எடுத்துக் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம். 

அழகிய முறையில் கஃபனிடுதல் உடலின் பாகங்கள் திறந்திருக்காத வகையிலும், உள் உறுப்புகளை வெளிக்காட்டாத வகையிலும், ஏனோ தானோ என்றில்லாமலும் நேர்த்தியாகக் கஃபன் இட வேண்டும்.

'உங்களில் ஒருவர் தமது சகோதரருக்குக் கஃபன் இட்டால் அதை அழகுறச் செய்யட்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவி : ஜாபிர் (ரலி) : முஸ்ம் 1567 

வெள்ளை ஆடையில் கஃபனிடுதல் 

கஃபன் ஆடை எந்த நிறத்திலும் இருக்கலாம்.        ஆயினும் வெள்ளை ஆடையே சிறந்ததாகும். 'நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும்.

உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ 915, அபூ தாவூத் 3539, இப்னு மாஜா 1461 அஹ்மத் 2109, 2349, 2878, 3171, 3251 



வெள்ளை ஆடையில் கஃபனிடுவது கட்டாயம் இல்லை என்பதையும் அதுவே சிறந்தது என்பதையும் மேற்கண்ட நபிமொழியிலிருந்து அறியலாம். வண்ண ஆடையிலும்

கஃபன் இடலாம் வண்ண ஆடையில் கஃபனிடுவது பொருளாதார ரீதியாகச் சிரமமாக இல்லாதவர்கள் வண்ண ஆடையில் கஃபனிட இயலுமானால் அவ்வாறு கஃபனிடுவது தவறில்லை. 

'உங்களில் ஒருவர் மரணமடைந்து அவர் வசதி பெற்றவராகவும் இருந்தால் கோடுகள் போட்ட ஆடையில் கஃபனிடலாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 2739 

தைக்கப்பட்ட ஆடையில் கஃபனிடுதல் 

தைக்கப்படாத ஆடையில் தான் கஃபனிட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. தைக்கப்பட்ட மேலாடை, கீழாடை ஆகியவற்றாலும் கஃபனிடலாம்.

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இறந்த போது அவரது மகன் (இவர் முஸ்லிமாக இருந்தார்) நபிகள் நாயகத்திடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே!

உங்கள் சட்டையைத் தாருங்கள் (அதில்) அவரைக் கஃபனிட வேண்டும்' என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவரிடம் கொடுத்தார்கள். (சுருக்கம்) 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1269, 4670, 5796 

ஒரு கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தார். அப்போரில் கழுத்தில் அம்பு பாய்ந்து வீர மரணம் அடைந்தார். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஜுப்பாவை (குளிராடை - ஸ்வெட்டர்) அவருக்குக் கஃபன் ஆடையாக அணிவித்தார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) 

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) நூல்: நஸயீ 1927 

பழைய ஆடையில் கபனிடுதல் ... 

குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (குளிப்பாட்டி முடித்ததும்) நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்தோம்.

தமது இடுப்பிலிருந்து வேட்டியைக் கழற்றி 'இதை அவருக்கு உள்ளாடையாக்குங்கள்!' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) நூல்: புகாரி 1253, 1254, 1257, 1259, 1261 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அணிந்திருந்த ஆடையைத் தமது மகளுக்குக் கஃபனாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதால் பழைய ஆடைகளைக் கஃபனாகப் பயன்படுத்துவது தவறல்ல என்று அறியலாம்.

உள்ளாடை அணிவித்தல் இறந்தவரின் உடலை முழுமையாக மறைப்பது தான் கஃபன் என்றாலும் மேலே போர்த்தும் துணியுடன் உள்ளாடையாக மற்றொரு துணியைச் சேர்த்துக் கொள்ளலாம். 

முந்தைய தலைப்பில் எடுத்துக் காட்டிய ஹதீஸே இதற்கு ஆதாரமாக உள்ளது. இஹ்ராம் அணிந்தவரின் கஃபன் ஆடை ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் மரணித்து விட்டால் இஹ்ராமின் போது அணிந்த ஆடையிலேயே அவரைக் கஃபனிட வேண்டும். 

இஹ்ராம் அணிந்த ஒருவர் அரஃபா மைதானத்தில் நபிகள் நாயகத்துடன் இருந்த போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து கழுத்து முறிந்து இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவரைத் தண்ணீராலும், இலந்தை இலையாலும் குளிப்பாட்டுங்கள். 


இவருடைய இரண்டு ஆடைகளில் இவரைக் கஃபனிடுங்கள். இவருக்கு நறுமணம் பூச வேண்டாம். இவரது தலையை மறைக்க வேண்டாம். ஏனெனில் இவர் கியாமத் நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்' என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1850, 1851 

கஃபனிட்ட பின் நறுமணம் பூசுதல் 

கஃபனிட்ட பின் இறந்தவரின் உடலுக்கு நறுமணம் பூசலாம். இஹ்ராம் அணிந்தவருக்கு நறுமணம் தடை செய்யப்பட்டதால் அவர் இறந்த பிறகு நறுமணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர்க்கச் சொன்னார்கள்.

இதிலிருந்து மற்றவர்களின் உடலுக்கு நறுமணம் பூசலாம் என்று அறிய முடியும். தலையையும் மறைத்து கஃபனிட வேண்டும் கஃபன் என்பது தலை உள்ளிட்ட முழு உடலையும் மறைக்கும் வகையில் இருக்க வேண்டும். 

உடம்பை மறைத்துவிட்டு தலையை மட்டும் விட்டுவிடக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஹிஜ்ரத் செய்தோம். அதற்கான நன்மை அல்லாஹ்விடம் உறுதியாகி விட்டது. 

தமது நன்மையில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமல் மரணித்தவர்களும் எங்களில் இருந்தனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவாராவார். அவர் உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவர் ஒரு போர்வையை மட்டுமே விட்டுச் சென்றார். 

அதன் மூலம் அவரது தலையை மறைத்தால் கால்கள் தெரிந்தன. கால்களை மறைத்தால் தலை தெரிந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இதன் மூலம் இவரது தலையை மூடுங்கள். இவரது கால் பகுதியில் இத்கர் என்ற புல்லைப் போடுங்கள்' எனக் கூறினார்கள். 

அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத் (ரலி) நூல்: புகாரி 4045, 4047, 1275, 1276, 3897, 3914, 4082, 6448 

கஃபனிடும் போது தலையை மூட வேண்டும் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிய வரும். இஹ்ராம் அணிந்தவர் பற்றிய ஹதீஸில் அவரது தலையை மறைக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஏனெனில் இஹ்ராம் அணிந்தவர் தலையை மறைக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளார். 

அவருக்குத் தலையை மறைக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து மற்றவர்களின் தலை மறைக்கப்பட வேண்டும் என்பதை விளங்கலாம். 

கஃபனிடும் அளவுக்குத் துணி கிடைக்கா விட்டால்... 

சில சமயங்களில் முழு உடலையும் மறைக்கும் அளவுக்கு துணி கிடைக்காமல் போகலாம். அல்லது அதை வாங்கும் அளவுக்கு வசதியில்லாமல் போகலாம்.

அது போன்ற சந்தர்ப்பங்களில் வைக்கோல் போன்ற கிடைக்கும் பொருட்களால் எஞ்சிய பகுதியை மறைக்க வேண்டும்.

முந்தைய தலைப்பில் இடம் பெற்றுள்ள நபிமொழியே இதற்கு ஆதாரமாகும். புதிய ஆடையில் கஃபனிடுதல் மேற்கண்ட நபிமொழியில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் பழைய ஆடையிலேயே கஃபனிடப்பட்டார்கள் என்பதை அறியலாம். 

ஆயினும் புதிய ஆடையில் கஃபனிடுவது தவறில்லை. ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மேலாடையைக் கொண்டு வந்தார். 

நீங்கள் இதை அணிய வேண்டும் என்பதற்காக என் கையால் நெய்து வந்திருக்கிறேன்' என்று அவர் கூறினார். 

அதை ஆவலுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தார்கள்.

அப்போது ஒரு மனிதர் 'இது எவ்வளவு அழகாக உள்ளது. எனக்குத் தாருங்கள்' என்று கேட்டார். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை மிகவும் விருப்பத்துடன் அணிந்திருக்கிறார்கள். 

 
எவர் கேட்டாலும் மறுக்க மாட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் அவர்களிடம் இதைக் கேட்டு விட்டாயே!' என்று மற்றவர்கள் அவரைக் கடிந்து கொண்டார்கள்.

அதற்கு அவர் 'நான் இதை அணிவதற்காகக் கேட்கவில்லை; எனக்குக் கஃபனாக அமைய வேண்டும் என்பதற்காகவே கேட்டேன்' என்றார். அதுவே அவரது கஃபனாக அமைந்தது. (சுருக்கம்) 

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி நூல்: புகாரி 2093, 1277, 5810, 6036 

தனது கஃபனை தானே தயார்படுத்திக் கொள்ளலாம் 

நாம் மரணித்த பின் நமக்கு இது தான் கஃபனாக அமைய வேண்டும் என்று விரும்பி தனது கஃபன் துணியை ஒருவர் தயார்படுத்தி வைக்கலாம். 

அவ்வாறு ஒருவர் தயார் படுத்தி வைத்திருந்தால் அவரது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.    மேற்கண்ட ஹதீஸிலிருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம். 

தைக்கப்படாத ஆடையில் கஃபனிடுதல் (என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்களின் மரண வேளையில் அவர்களிடம் நான் சென்றேன்.

அப்போது அவர்கள், 'நபிகள் நாயகத்தை எத்தனை ஆடையில் கஃபனிட்டீர்கள்?' என்று கேட்டார்கள். 'யமன் நாட்டில் தயாரிக்கப்பட்ட வெள்ளையான மூன்று ஆடைகளில் கஃபனிட்டோம்.

அதில் சட்டையோ, தலைப்பாகையோ இருக்கவில்லை' என்று நான் கூறினேன். 'எந்த நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்?' என்று அவர்கள் கேட்டார்கள். 'திங்கள் கிழமை' என்று நான் கூறினேன். 

'இன்று என்ன கிழமை?' எனக் கேட்டர்கள். 'திங்கள் கிழமை' என்று நான் கூறினேன். 'இன்றிரவுக்குப் பின் எனக்கு மரணம் வந்துவிடும் என்றே எதிர்பார்க்கிறேன்' என்று கூறினார்கள். தாம் அணிந்திருந்த ஆடையை உற்று நோக்கினார்கள். 

அதில் குங்குமப் பூ கறை இருந்தது. 'எனது இந்த ஆடையைக் கழுவி இத்துடன் மேலும் இரண்டு ஆடைகளை அதிகமாக்குங்கள். அதில் எனக்குக் கஃபனிடுங்கள்' என்று கூறினார்கள். 'இது மிகவும் பழையதாக உள்ளதே!' என்று நான் கூறினேன். 

அதற்கவர்கள் 'உயிருடன் உள்ளவர் தான் புதிய ஆடைக்கு அதிகம் தகுதியானவர். இந்த ஆடை சீழ் சலத்திற்குத் தானே போகப் போகிறது' என்றார்கள்.

(ஆனால் அவர்கள் விரும்பிய படி திங்கள் கிழமை மரணிக்கவில்லை) செவ்வாய்க் கிழமை மாலை தான் மரணித்தார்கள். விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) புகாரி 1378 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தைக்கப்பட்ட சட்டையில் கஃபனிடப்படவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம். 

முக்கியப் பிரமுகருக்கு தலைப்பாகையுடன் கஃபனிடலாமா? 

மார்க்க அறிஞர்கள் போன்ற பிரமுகர்கள் கஃபனிடப்படும் போது அவர்களுக்குத் தலைப்பாகை கட்டி அதனுடன் கஃபனிடும் வழக்கம் பல பகுதிகளில் காணப்படுகிறது.

வாழும் போது தனியாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டது போல மரணித்த பிறகும் வேறுபாடு காட்டப்படுவது கொடுமையிலும் கொடுமையாகும்.

மாமனிதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை, சட்டையுடன் கஃபனிடப்படவில்லை என்ற மேற்கண்ட ஹதீஸிலிருந்து அவர்கள் செய்வது ஆதாரமற்றது என்பதை அறியலாம். 

கிரீடம், தலைப்பாகை போன்றவற்றை அணிந்து கபனிடுவது கெட்ட முன்மாதிரியாகும். வீரமரணம் அடைந்தவர்களை அவர்களின் ஆடையில் கஃபனிடுதல்

நியாயத்துக்காக நடக்கும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப் பட்டவர்களை அவர்கள் அணிந்திருந்த ஆடையிலேயே கஃபனிடுதல் நல்லது. 

 

முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களுக்கு அணிந்திருந்த ஆடையே கஃபனாக ஆனது என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். 'அவர்களை (ஷஹீத்களை) அவர்களின் ஆடைகளிலேயே கஃபனிடுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸஃலபா (ரலி) நூல்: அஹ்மத் 22547 

ஆயினும் இது கட்டாயமானது அல்ல. ஹம்ஸா அவர்கள் கொல்லப்பட்ட போது அவர்களின் சகோதரி ஸஃபிய்யா அவர்கள் இரண்டு ஆடைகளைப் போர்க்களத்திற்குக் கொண்டு வந்து அதில் தனது சகோதரர் ஹம்ஸாவுக்குக் கஃபனிடுமாறு கூறினார்கள். 

ஹம்ஸாவுக்கு அருகில் மற்றொருவரும் கொல்லப்பட்டுக் கிடந்ததால் இருவரையும் தலா ஒரு ஆடையில் கஃபனிட்டோம். 

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) நூல்: அஹ்மத் 1344 

ஹம்ஸாவும், மற்றொருவரும் போரின் போது அணிந்திருந்த ஆடையில் கஃபனிடப்படாமல் வேறு ஆடையில் கஃபனிடப் பட்டார்கள். இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்திருப்பார்கள்.

நெருக்கடியான நேரத்தில் ஒரு ஆடையில் இருவரைக் கஃபனிடலாம் உஹதுப் போரில் கொல்லப்பட்ட என் தந்தையும், என் சிறிய தந்தையும் ஒரு போர்வையில் கஃபனிடப்பட்டார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 1348 

உஹதுப் போரில் கொல்லப்பட்ட இருவரை ஒரு ஆடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபனிட்டார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 1343. 1348, 4080
Tags:
Privacy and cookie settings