படப்பிடிப்பின்போது நடிகர் அமீர்கானுக்கு தோள்பட்டையில் காயம் !

இந்தி நடிகர் அமீர்கான் தற்போது ‘தங்கல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். குத்துச்சண்டை வீரர் மகாவீர் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட இந்த படத்தை இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்குகிறார்.
 
இதன் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பின் போது அமீர்கான் குத்துச்சண்டை போடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது அவரது தோள்பட்டையில் திடீரென காயம் ஏற்பட்டது. இதனால், அமீர்கான் வலியால் துடித்தார். உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், மேற்கொண்டு சிரமம் எடுக்கக்கூடாது என்றும், ஒரு வார காலம் ஓய்வு தேவை என்றும் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து, அமீர்கான் மும்பை அழைத்து வரப்பட்டார்.

அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதுபற்றி அமீர்கான் தன்னுடைய ‘டுவிட்டர்’ வலைதள பக்கத்தில், ‘‘இது ஒன்றும் பெரிய அளவிலான காயம் அல்ல. ஒரு வார ஓய்வுக்கு பின்னர், படப்பிடிப்புக்கு திரும்பி விடுவேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings