உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் பெண்களுக்காக 'பிங்க் ஆட்டோ' எனும் ரோஸ் நிற ஆட்டோக்கள் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் கௌதம்புத்தர் மாவட்டத்தில் உள்ளது நொய்டா.
பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் நிறைந்த வளர்ந்த நகரமான நொய்டாவில் பெண்களுக்கானப் பாதுகாப்பு குறைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இங்கு அவர்களுக்கு அடிக்கடி நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை சமாளிக்க வேண்டி நொய்டா போலீஸார் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்த வகையில், பிங்க் ஆட்டோ எனும் பெயரில் புதிதாக 340 ஆட்டோக்களுக்கு அரசு உரிமம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவு அடுத்த மாதம் முதல் துவங்க உள்ளது. இதில் பெண் ஓட்டுநனரின் ஆட்டோக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது.
இந்த ஆட்டோக்கள் பயணம் செய்யும் பாதைகளை கண்காணிக்கும் வகையில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இத்துடன் பெண்களின் அவசர உதவிக்காக 'ஹெல்ப் லைன்' எண்களும் குறிப்பட்டிருக்கும். இவை பிங்க் ஆட்டோக்கள் என்பதை குறிப்பிடும் வகையில் அவைகள் மீது ரோஸ் நிற வர்ணம் பூசப்பட்டிருக்கும்.
இந்த ஆட்டோக்கள் இரட்டை நகரமாக வளர்ந்து வரும் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் பணியாற்றும் பெண்களுக்காக இயக்கப்படுகிறது. இந்த நகரின் தொழில் நிறுவனங்களில் இரவு மற்றும் பகல் என ஷிப்ட் முறஇயில் பணியாற்றும் பெண்களுக்கு அதிக பலனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற பிங்க் ஆட்டோக்கள் ஏற்கெனவே டெல்லியின் அருகிலுள்ள ஹரியாணா மாநிலம் குர்காவ் மற்றும் ஜார்கண்ட் மாநில ராஞ்சியிலும் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கு அங்கு கிடைத்து வரும் பெரும் ஆதரவை அடுத்து இவை நொய்டாவிலும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நொய்டாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகள் உட்பட 14 இடங்களில் இருந்து பிங்க் ஆட்டோ இயங்கும். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மேலும் எண்ணிக்கையில் பிங்க் ஆட்டோக்கள் இயக்கப்படும் என தெரிகிறது.