மழைக்குப் பிறகு சென்னை மக்களை அச்சுறுத்தும் கழிவுநீர் பிரச்சினை !

சென்னையை புரட்டிப் போட்ட கனமழை நின்றிருக்கலாம். ஆனால் சென்னை தெருக்களில் தேங்கியுள்ள சாக்கடைக் கழிவுநீர் இப்போது சென்னை மக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினையாகியுள்ளது.
அரும்பாக்கத்தில் உள்ள எம்எம்டிஏ காலனி, வடபழனி அழகிரி நகர், வில்லிவாக்கம் வடக்கு ஜகன்னாதன் நகர், அடையார் நேரு நகர் உள்ளிட்ட இடங்களில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் தெருக்களில் ஓடுகிறது.

அழகிரி நகரின் கிருஷ்ண பார்த்தசாரதி கூறும்போது, “ஒட்டுமொத்த சாலையும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நாங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. என்னுடைய வயதான தாயார் கழிவு நீரில் இறங்கி நடக்க முடியாமல் தவிக்கிறார். குடிநீரும் கழிவு நீர் கலப்பினால் மாசடைந்துள்ளது” என்றார்.

இதே போல் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி மக்கள் கழிவு நீர் தெருக்களில் வழிந்து ஓடுவது குறித்து நடவடிக்கை கோரி பல்வேறு அரசு தரப்பினரை அணுகியுள்ளனர் ஆனால் பலன் இல்லை, 2 நாட்களாக அங்கு குடியிருப்போர் கடும் அவதிகளைச் சந்தித்து வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இத்தகைய இடங்களுக்கு ஆட்டோக்களும் வர மறுப்பதாகவும் அப்படியே வந்தாலும் கடும் கட்டணம் வசூலிப்பதாகவும் அரும்பாக்கம் வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

வீட்டின் ஹாலிலிருந்து பின்பகுதியில் உள்ள பாத்ரூம் சென்று கால் கழுவ வேண்டும், ஆனால் ஹால் முழுதும் இதனால் கழிவு நீர் தடயம் ஏற்படுகிறது, இது நோய்க்கிருமிகளை உருவாக்குவதாகும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

மேலும், பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் எப்படி இந்த கழிவு நீரில் பள்ளிகளுக்குச் செல்ல முடியும் என்று கவலை தெரிவித்தனர் இப்பகுதி மக்கள்.

இது குறித்து சென்னை மாநகர குடிநீர் விநியோக மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, சாக்கடை அடைப்புகளை எடுக்க ஆட்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும், ஆனால் இதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும், ஆனால் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings