எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்.. கமல்ஹாசன் !

தனது நேர்மையைச் சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன் என்று கூறிய நடிகர் கமல்ஹாசன், "கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பி.ஜே.பி, திமுக, அதிமுக என யாராக இருந்தாலும் - எனது பேச்சு சுதந்திரமும், எனது நண்பர்கள் குடும்பச் சுதந்திரமும் அடிபடும் எனில் கண்டிப்பாக குரல் கொடுப்பேன்" என்றார்.
 கமல் நற்பணி இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கமல் | படம்: எல்.சீனிவாசன்
நடிகர் கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7) தனது 61வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை ஒட்டி அவரது நற்பணி இயக்கத்தின் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவிட்டு பேசியது: 

"விழா காலங்களில் நீங்கள் செய்யும் உதவிகள் எல்லாம் எனக்காக செய்யும் மரியாதைகள் அல்ல என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு பரிசாக அளிக்கப்படும் தங்கமும், வைரமும் வேலைக்கு ஆகாது. 

நீங்கள் அன்போடு கொடுக்கிறீர்கள், அதை உருக்கினால் தான் எங்களுக்கு வேலைக்காகும். அதன் மூலம் வரும் வருமானம் நற்பணிகளுக்கு கொடுக்கலாம் என்று தான், அதற்கு அவமரியாதை செய்வதாக எண்ணிவிடக் கூடாது. 

ஒவ்வொரு முறையும் சந்தேகத்துடன் பல கேள்விகள் என் மீது எழுப்பப்பட்டு இருக்கின்றன. என் படங்கள் வெளியாகும் போது, நீ நல்ல நடிகன் தானா என்று ஒவ்வொரு முறையும் எழுப்பப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அக்கேள்விக்கான பதிலாக துணிச்சலும், திறமையும் என்னிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும் வரை நான் இந்த தொழிலில் நீடிப்பேன். 

ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்னை ஏன் அரசியலுக்கு வருகிறீர்களா என்று ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அந்த கேள்வியைக் கேட்பவர்கள் யார் என்று எனக்கு தெரியும்.

வந்தா சவுகர்யமா இருக்கும் இந்த பஸ்ஸைப் பிடித்து போய்விடலாம் என்று நினைப்பவர்கள் தான் கேட்கிறார்கள். இந்த பஸ் வேறு ரூட்டுக்கு போகும், நீங்கள் நினைக்கும் ரூட்டுக்கு போகாது. ஏறினீர்கள் என்றால் பஸ் நிறுத்தி பாதியில் இறக்கிவிட்டு தான் போகும். 
 
என்னுடைய நேர்மையைக் கேள்வி கேட்கிறார்கள், அந்த கோபத்தில் தான் பேசுகிறேன். ரொம்ப ரத்தக்காயம் பட்டு தான் இந்த நேர்மையோடு இருக்கிறேன். என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன். 

மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது.

எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு. 

எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். 

சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தான் கோயிலை இடிப்பேன் என்பார்கள். எனக்கு நாத்திகம் என்ற பெயரிலேயே விருப்பம் கிடையாது. நான் நாத்திகன் அல்ல என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். நான் பகுத்தறிவாளன். 

நாளைக்கு சக்தி வாய்ந்த சாமியர் ஒரு தெய்வத்தை அழைத்து வந்தால் கைகுலுக்கி வரவேற்பேன், கும்பிட மாட்டேன். செய்வதாய் சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் என்னவாயிற்று என்ற கேள்வியையும் கேட்பேன். சுனாமி வந்த போது, ஏழ்மை வந்த போது, உங்களுக்கு ஏன் இந்த GENDER வேற்றுமை என்ற கேள்விகள் எல்லாம் கேட்பேன்.

சில நேரங்களில் வடசொல் மட்டுமே பேசுகிறீர்களே, ஏன் தமிழ் பேச வரமாட்டேன் என்கிறது என கேட்பேன். தெய்வங்கள் ஒரு புறம் இருக்கட்டும், உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள். 

எந்த காரணங்களுக்காக சாப்பிடாதீர்கள் என சொல்கிறீர்கள் என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதலால் சாப்பிடாதீர்கள். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என்னை விட பெரிய மிருகங்களை சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். 

சாப்பாடே இல்லாமல் நிறைய பேர் இந்தியாவில் இருக்கிறார்கள், அதை கவனியுங்கள். அதை விடுத்து இதை தான் சாப்பிட வேண்டும் என்று மெனு போடாதீர்கள். இன்றைய விஞ்ஞானிகள் மாடு, கன்றுகளை விடுத்து பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள். 

இன்னும் ஒரு 30 வருடங்கள் கழித்து மாறும். அப்போதும் ஏதாவது ஒரு பூச்சி சாமியார் வந்து, அதெல்லாம் சாப்பிடக் கூடாது என்பார். அது நடந்து கொண்டே தான் இருக்கும்.

விருதுகளைத் திருப்பித் தர மாட்டேன் என்று கமல் சொன்னது தப்பு. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானது என்கிறார்கள். அது எப்படி எதிர்ப்பாக முடியும். காந்தி வெள்ளையர்களை எதிர்த்து போராடினார். 

வெள்ளையர்கள் கொடுத்த வக்கீல் பட்டத்தை திருப்பிக் கொடுக்க முடியுமா. விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதால், அடுத்து வாதாட வேண்டிய வழக்குகள் வாதாட முடியாமல் போகும். எனக்கு கொடுக்கப்பட்ட மரியாதை அரசு கொடுத்த மரியாதை அல்ல. 12 அறிஞர்கள் கொடுத்தது. 

அவர்களை நான் அவமதிக்க மாட்டேன். சகிப்பின்மை வளர்ந்து வருகிறது என்றால் குரல் கொடுக்கிறேன். இதோ அது தான் அந்தக் குரல். இது செய்தால் போதுமானது. கட்சிகள் பாகுபாடு இல்லாமல் சொல்கிறேன், எங்களது சுதந்திரம் பறிபோகும் போது எல்லாம் இந்த குரல் எழும். 

கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பி.ஜே.பி, திமுக, அதிமுக என யாராக இருந்தாலும் எனது பேச்சு சுதந்திரமும், எனது நண்பர்கள் குடும்பச் சுதந்திரமும் அடிபடும் எனில் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். 

அதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. உடனே அரசியலுக்கு வருகிறீர்களா என்று கேட்கிறார்கள், அது எனக்கு வேண்டாம். 5 வருடங்களுக்கு ஒரு முறை, என் கையை கறையாக்கிக் கொள்கிறேனே அந்த கறை போதுமானது.

காந்தியைப் பற்றி பேசுகிறான், இவன் காங்கிரஸ்காரன் என்று கூட நினைப்பார்கள். என் அப்பா காந்தி பக்தர், ஆனால் நான் காந்தியின் நண்பன். காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற எந்த ஒரு கட்சியினரின் உதவியும் இல்லாமல் நானாக காந்தியைப் பற்றி தெரிந்து கொண்டேன். 

நான் ஞானி என்று சொல்ல மாட்டேன், நான் ஞானம் சேகரிப்பவன். தூய்மை இந்தியா திட்டத்தை நான் யார் என்று தெரிந்தே தானே கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். இந்த தேசத்தை கட்டிக் காக்கும் ஒரு சேவைக்கு எந்த ஒரு கட்சி அழைத்தாலும் நான் ஓடிவருவேன். 

அது ஒரு பேருதாரணம். தூய்மை இந்தியா திட்டம். அவர் ஒரு பகுத்தறிவாதி என்று என்னை ஒதுக்கவில்லை, அதுவும் ஒரு சகிப்புதன்மை தான். இது இன்னும் அவர்களுக்கும் வர வேண்டும். 

சகிப்புத்தன்மை இந்த நாட்டில் இல்லை என்பதற்கு ஒரு பெரிய உதாரணமே பாகிஸ்தான். நம்மோடு இருக்க வேண்டிய சகோதரர்களை வேறு வீடு கட்டுக் கொடுத்துவிட்ட சந்தோஷத்தில் இருமாந்து கொண்டிருக்கிறோம்.


அது எவ்வளவு அசட்டுத்தனம். எவ்வளவு பெரிய பங்கு போட்டு பிரிந்துவிட்டோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் அப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்துவிடக் கூடாது.

தேசப் பக்தியைத் தாண்டி உலகப் பக்தியை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம். பாஸ்போர்ட் எல்லாம் வேடந்தாங்கல் பறவைகள் போல் நாம் இழக்கும் காலம் வரத்தான் போகிறது. 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூவிய தமிழன், இதை செய்துக் காட்ட வேண்டாமா. அதற்கான பாதைகள் நாம் சென்று கொண்டிருக்கிறோமா என்று ஆராயா துவங்கினாலா போதும் இந்த மாதியான அபத்தமான விவாதங்களில் நாம் ஈடுபட மாட்டோம். 

ஏன் இவ்வளவு கோபமாக பேசுகிறேன் என்றால் என்னுடைய நேர்மையைச் சந்தேகித்த அந்த கோபம் தான். எனக்கு அக்னிப்பரீட்சை எல்லாம் வைக்க முடியாது." என்று தெரிவித்தார் கமல்ஹாசன்.
Tags:
Privacy and cookie settings