இந்திய அரசிடம் சரணடைய விரும்பி சில ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்தார் தாவூத் இப்ராகிம். ஆனால் அவரது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால்தான் அவர் சரணடைவதிலிருந்து பின்வாங்கி விட்டார்.
அவர் கேட்ட சில கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வந்திருந்தால் தாவூத்தும் இன்னேரம் நமது பிடியில் வந்திருப்பார் என்று தாவூத்தின் வழக்கறிஞரான ஷியாம் கேஸ்வானி கூறியுள்ளார்.
மேலும் சோட்டா ராஜனின் அத்தனை வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைத்திருக்கும் முடிவு தன்னை ஆச்சரியப்படுத்தியுள்ளதாகவும் கேஸ்வானி கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்தியா டுடே இதழுக்கு கேஸ்வானி அளித்துள்ள பேட்டி... சோட்டா ராஜன் தன்னை மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கக் கூடாது என்று எப்படிக் கூறினாரோ அதே போலத்தான் தாவூத் இப்ராகிமும் கோரிக்கை விடுத்தார்.
தனது உயிருக்கு அங்கு ஆபத்து இருப்பதாக கருதினார் தாவூத். மேலும் சோட்டா ராஜன் தற்போது என்னவெல்லாம் கோரிக்கை வைத்தாரோ அதே போன்ற கோரிக்கைகளைத்தான் அப்போது தாவூத்தும் வைத்தார்.
ஆனால் சோட்டா ராஜன் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததைப் போல தாவூத் கோரிக்கைகளை ஏற்க முன்வரவில்லை என்றார் கேஸ்வானி.
தாவூத் இப்ராகிம் சரணடைய விரும்பியதாக முன்னாள் பாஜக எம்.பி. ராம்ஜேத்மலானியும் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தனது உயிருக்கு இந்தியாவில் ஆபத்து இருப்பதாக தாவூத் தன்னிடம் கூறியதாகவும் ஜேத்மலானி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு வைத்திருந்த, வைத்துள்ள மும்பை போலீஸ் அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை சோட்டா ராஜன் சிபிஐ வசம் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடந்த விசாரணையின்போது இதை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.