திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின் போது வேலூரில் கல்லூரி மாணவி ஒருவர் மது பாட்டிலை அவருக்கு பரிசாக அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தினமும் குடிக்க காசு வேணுமே. காசு இல்லாததால அப்செட்டாகிட்டார். என்னோட இயல்பான அப்பாவே மாறிப் போய்ட்டார். இப்படியிருந்த சமயத்துலதான் குடிச்சிட்டு வண்டில போகும் போது விபத்துல சிக்கி இறந்து போய்ட்டார்.
வேலுாரில் மேல் விஷாரம், அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லுாரியில் கலந்துரையாடல் முடிந்து கிளம்பினார் ஸ்டாலின். அப்போது நிவேதிதா என்ற மாணவி, "ஒவ்வொரு ஊர்லயும் அந்தந்த ஊருக்கே ஃபேமஸான கம்பு, நெல்லுன்னு தந்திருப்பாங்க.
எங்க வேலூர்ல ஒயின்ஷாப்தான் ஃபேமஸ். இதுக்கு என்ன சார் பண்ண போறீங்க...? சின்ன பசங்கள்ல இருந்து பெரியவங்க வரை யார் கேட்டாலும் சாராயம் கிடைக்குது. இதனாலதான் எங்கப்பா இறந்தார்.
இதுல இருக்கிறது சாராயம் இல்லை... பொம்பளைங்க கண்ணீர்" என்று சொல்லி மது பாட்டிலை ஸ்டாலினிடம் தந்தார். இதைக் கண்டு ஸ்டாலின் உட்பட சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், "இந்த கலாச்சாரத்தை ஒழிக்கதான் பூரண மதுவிலக்கை தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கிறோம்.
உங்க உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன். எங்கள் ஆட்சியில் மதுவிலக்கை கட்டாயம் கொண்டு வருவோம்" என ஸ்டாலின் தெரிவித்தார். இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலினுக்கு மது பாட்டிலைத் தந்த அந்த மாணவியின் பெயர் நிவேதிதா.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அவர் குடியினால் தன் குடும்பம் எப்படி சிதைந்தது என ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். கூடவே, தான் ஏன் ஸ்டாலினுக்கு மது பாட்டிலைப் பரிசாக அளித்தேன் என்பதையும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதோ அந்தப் பேட்டி... ஸ்டாலின் மக்களை சந்திச்சு குறைகள் கேட்கறத செய்திகள்ல பார்த்தேன். எங்க கல்லூரிக்கு வர்றது தெரிஞ்சது. இன்னைக்கு குடியால பல குடும்பம் சீரழிஞ்சு வருது. என்னோட குடும்பம் அதற்கு நேரடி உதாரணம். குடிக்கு எதிரா அழுத்தமா குரல் கொடுக்கனும்னு முடிவு பண்ணேன்.
அதனாலதான் என் உறவினர் மூலமா, மது பாட்டிலை வாங்கி எடுத்து போய் ஸ்டாலின் சார்கிட்ட பேசுனேன். எங்கப்பா கட்டட தொழில்ல இருந்தவர். ஜாலிக்காக அப்பப்போ குடிக்க ஆரம்பிச்சிருக்கார்.
ஒரு கட்டத்துல குடிக்கு அடிமையாகிட்டார். அந்தளவுக்கு அவரை குடி அடிமைப்படுத்திடுச்சு. இதனால சரியா வேலைக்கு போறதில்லை. வேலை கிடைக்கிறது குறைஞ்சு போச்சு. எங்கம்மா எவ்வளவோ சொல்லியும் கேட்கலை.
தினமும் குடிக்க காசு வேணுமே. காசு இல்லாததால அப்செட்டாகிட்டார். என்னோட இயல்பான அப்பாவே மாறிப் போய்ட்டார். இப்படியிருந்த சமயத்துலதான் குடிச்சிட்டு வண்டில போகும் போது விபத்துல சிக்கி இறந்து போய்ட்டார்.
நான் ஐந்தாவது படிக்கும் போது ஒரு நாள் எங்கப்பா விபத்துல இறந்துட்டதா சொல்லி என்னை அழைச்சிட்டு போனாங்க. இனிமே எங்கப்பா எழுந்து வந்து என் கூட பேசமாட்டார், விளையாடமாட்டார், எங்கப்பா இனி இல்லைன்னு தெரிஞ்சு கதறி அழுதேன்.
எங்கப்பா இறந்ததுக்குக் காரணம் இந்த கேவலமான குடிதான். அதற்கு பிறகு எங்க குடும்பத்துக்கு சித்தப்பாதான் உதவியா இருக்கார். அவரும் இல்லனா நாங்க நொடிச்சி போயிருப்போம்.
நான் ஸ்டாலின் சார்கிட்ட சாராய பாட்டிலை தந்ததை நெட்ல காமெடியாக்கி ஷேர் செய்றாங்க. அந்த வலி அவங்க அம்மாவோ, தங்கச்சியோ, பொண்ணோ அனுபவிக்கும்போதுதான் தெரியும்.
இன்னைக்கு யார் வேணும்னாலும் ஈசியா வாங்கி குடிக்கிற நிலைமை தமிழ்நாட்டுல வந்திடுச்சு. எவ்ளோ யங்ஸ்டர்ஸ் ஜாலிக்கு, விளையாட்டுக்குன்னு ஆரம்பிச்சு, வாழ்க்கையே தொலைக்கிறாங்க.
அதனால் தான் ஸ்டாலின் சார்கிட்ட மது பாட்டிலை கொடுத்து, 'எப்படியாவது சாராய கடையை மூடுங்க!' ன்னு கேட்டுகிட்டேன். சாராய பாட்டில் இல்லாம தமிழ் சினிமாவே இல்லை. அதனால மொத்தமா தமிழ்நாட்ல மதுவை தடை பண்ணணும்' என தன் சோகக் கதையை பகிர்ந்து கொண்டுள்ளார் நிவேதிதா.