அசீமானந்தா ஜாமீனை லக்வியுடன் ஒப்பிட்டு ஓமர் கேள்வி

2007-ம் ஆண்டு சம்சவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுவாமி அசீமானந்தாவுக்கு ஜாமீன் வழங்கியது குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். 

 

2008 மும்பை குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சகியுர் ரஹ்மான் லக்வியை பாகிஸ்தான் ஜாமீனில் விடுதலை செய்தது. 

அப்போது, பாகிஸ்தான் அரசு கூறியதற்கும், தற்போது அசீமானந்தா ஜாமீனுக்கு இந்தியா கற்பிக்கும் நியாயத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்கிறார் ஒமர் அப்துல்லா. 

இது குறித்து ட்விட்டரில் அவர் இட்ட பதிவில், "அசீமானந்தா ஜாமீன் குறித்த இந்திய நியாயப்படுத்தல், லக்வி ஜாமீன் குறித்த பாகிஸ்தான் நியாயப்படுத்த லை விட எந்த விதத்தில் வித்தியாசமானது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

அசீமானந்தாவுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை தேசிய விசாரணைக் கழகம் எதிர்க்கப் போவதில்லை என்று கூறியிருந்தது. அதற்கான அடிப்படைகள் இல்லை என்று காரணம் விளக்கப்பட்டது. 

இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பரதிபாய் சவுத்ரி நாடாளுமன்ற கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், தேசிய விசாரணைக் கழகம் கூறியதை எடுத்துக் காட்டி தனது எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்திருந்தார். 

18, பிப்ரவரி 2007-ல் நடந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் சுமார் 68 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். பலியானோரில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் டிசம்பர் 30, 2010 அன்று தேசிய விசாரணைக் கழகம், சுவாமி அசீமானந்தாவுக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் இருப்பதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:
Privacy and cookie settings