தமிழகத்தில் மழை பாதித்த பகுதிகளை மத்திய அரசின் ஆய்வுக்குழு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள், சாலைகள், பாலங்கள், வீடுகள் போன்றவை பலத்த சேதமடைந்துள்ளன. தமிழக அரசு நிவாரண தொகையாக அறிவித்துள்ள ரூ.500 கோடி முதல் கட்டமாக இருக்க வேண்டும். இரண்டாவது கட்டமாக அதிக தொகையை அரசு அறிவிக்க வேண்டும்.
மேலும்,மத்திய அரசு முதல் கட்ட நிவாரணத்தொகையாக அறிவித்துள்ள ரூ.940 கோடி போதுமானதல்ல. தற்போது மத்திய அரசின் அதிகாரிகள் கொண்ட ஆய்வுக்குழு கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது.
இருப்பினும், மழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டனம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் முழுமையாக ஆய்வு செய்திட வேண்டும்.
தமிழக விவசாயிகளுக்கு வணிக வங்கிகள்,நபார்டு வங்கிகள் வழங்கிய பயிர்க் கடன்,விவசாயக் கடன் முழுவதையும் மத்திய அரசு தள்ளுபடி செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு வாசன் தெரிவித்துள்ளார்.