'புலி' படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை சுமூகமாகப் பேசி தீர்க்கப்பட்டுள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'புலி'.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்தார்கள். படம் வெளியான முதல் நாளே மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. முதல் நாளை விடுத்து அடுத்த நாள் முதலே வசூலும் இறங்கத் தொடங்கியது.
சில தினங்களுக்கு முன்பாக, இப்படத்தில் தனக்கு 50 லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாக ஸ்ரீதேவி புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாயின. இது குறித்து 'புலி' படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது தரப்பு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டனர்.
இந்நிலையில், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட 'புலி' படத்தின் தயாரிப்பாளர்கள், ஏற்கனவே இந்தி பதிப்பின் தொலைக்காட்சி உரிமையில் இருந்து 20% கொடுத்திருப்பதை தெரிவித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி - 'புலி' தயாரிப்பாளர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டு இருக்கிறது.