சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் நிறுவனமான ஹூவேய் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சோனி, ஜியோமி, மோட்டரோலா, ஜியோனி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் ஹூவேய் இணைந்திருக்கிறது.
இந்தியாவில் ஹூவேய் நிறுவனத்தின் ஹானார் மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தனது ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே தயாரிக்க ஆலோசித்து வருகிறது. சென்ற ஆண்டு மட்டும் 20 மில்லியன் ஹானர் ஹேண்ட்செட்டுகளை விற்றுள்ள ஹூவேய் 57 நாடுகளில் கால்பதித்துள்ளது.
ஆனால், இந்தியாவில் தற்போது இந்த வகை ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளத்தி்ல் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் ரீடெயில் பிராண்ட் ஷோ ரூம்களிலும் விற்பனைக்கு கொண்டு வர ஹூவேய் திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லியில், ஹானர் 7 ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப்படுத்தியபோது அந்நிறுவனத்தின் துணை தலைவர் சாவோ காங் இதை தெரிவித்தார். ஏற்கனவே, பெங்களூருவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் ஒன்றை ஹூவேய் நிறுவனம் கொண்டிருக்கிறது.
இது சீனாவுக்கு வெளியில் ஹூவேய் நிறுவனத்திற்கு இருக்கும் மிகப்பெரிய மையமாகும். தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்கனவே ஹூவேய் டெலிகாம் நெட்வொர்க் கருவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு கடந்த ஜூலை மாதம் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களையும் தயாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், விரைவில் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து ஸ்மார்ட்போன்களை தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையாகி வரும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவையே விஞ்சும் அளவிற்கு விற்பனை அதிவேகமாக நடந்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 2 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.டி.சி. தெரிவித்துள்ளது.