கடவுளிடம் நேரடியாக பேசுகிறேன்.. சாமியாரிணி ராதே மாவின் அடுத்த அதிரடி!

மனிதர்கள் பற்றி நான் புகார் கூறமாட்டேன். ஏனெனில் நான் நேரடியாகவே கடவுளிடம் பேசுகிறேன். அவர் எனக்கு நியாயம் வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நல்ல முடிவு எடுப்பதாக கடவுள் ஏற்கனவே என்னிடம் உறுதி அளித்துள்ளார்.
 
சினிமா நடிகை போல மேக் அப்... லிப்ஸ்டிக்... ஜிகு ஜிகு ஆடைகள் என ஒரு நடிகையைப் போல தோற்றம் அளிக்கும் இவர் சாமியாரிணி ராதே மா. 46 வயதான இவர் சினிமாவில் வரும் கவர்ச்சி நடிகை போல் எப்போதும் சிவப்பு நிற அலங்கார உடையில் கை யில் ரோஜாப்பூவுடன் சீடர்களுக்கு காட்சி தருவார். 
10 வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர் 18 வயதில் மோகன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராம்தீன் தாஸ் என்ற சாமியாரை சந்தித்த பின்னர் தன்னுடைய கணவரை பிரிந்து சாமியாராக வலம் வருகிறார். 

சாமியார்கள் என்றாலே சர்ச்சைக்குப் பஞ்சமிருக்காது. சமீப காலங்களாக சாமியார் ராதே மாவின் ஆட்சேபகரமான படங்கள் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இவர் குட்டைப் பாவாடை அணிந்து பாலிவுட் திரைப்பட இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.


ராதே மாவுக்கு எதிராக பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார். நிகி குப்தா என்ற இவருடைய சீடர் ஒருவரும் ராதே மா தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் செய்துள்ளார். 

மதத்தின் பேரை சொல்லி ராதே மா மக்களை ஏமாற்றி வருவதாக போரிவலியை சேர்ந்த ஒரு ஆர்வலர் போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து ராதே மா தலைமறைவாகி விட்டார்.

ஔரங்காபாத் அருகே படேகாவ் என்ற இடத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவரை போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்."நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. கடவுள் எனக்கு நீதி கிடைக்கச் செய்வார்" என்று ராதே மா அப்போது கூறினார்.

இந்த நிலையில், ராதே மா நேற்று காலையில் மும்பை வந்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அவர் தனது ஆண், பெண் சீடர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினார். பலர் ராதே மாவை தங்கள் மடியில் தூக்கி வைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தனர்.


ராதே மாவை சந்தித்து தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பேட்டி எடுத்தபோது தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்தார். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக கூறிய அவர், போலீசாரும் கூட எனது சீடர்கள்தான் என்றார்.

பெண் ஒருவர் தனக்கு எதிராக வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்து இருப்பது குறித்து குறிப்பிட்ட ராதே மா, அந்த பெண் மிகவும் ஏழை என்றும் தனக்கு ஏராளமாக சொத்து இருப்பதாலேயே தன் மீது அவர் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறினார். அந்த பெண்ணின் பின்னணி பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ராதே மா கூறினார்.

உங்களுடைய ஆட்சேபகரமான படங்களை மீடியாக்களில் யார் வெளியிட்டு இருப்பார்கள்? அவர்களைப் பற்றி புகார் கொடுப்பீர்களா? என்று அந்த நிருபர் கேட்டதற்கு, "மனிதர்கள் பற்றி நான் புகார் கூறமாட்டேன். 

ஏனெனில் நான் நேரடியாகவே கடவுளிடம் பேசுகிறேன். அவர் எனக்கு நியாயம் வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நல்ல முடிவு எடுப்பதாக கடவுள் ஏற்கனவே என்னிடம் உறுதி அளித்துள்ளார்" என்று ராதே மா பதிலளித்தார்.


இதனிடையே "யார் ஒருவர் ராவணன் போல் ஆணவமாக செயல்பட்டாலும் அவர்களாகவே அழிந்து போய்விடுவார்கள்" என்று மும்பையில் இருந்து ஔரங்காபாத்துக்கு விமானத்தில் சென்றபோது ராதே மா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். உண்மையே வெல்லும். 

கடவுள் எப்போதும் உண்மையையே ஆதரிப்பார். உண்மை என்பது அழகு. யார் ஒருவர் சமுதாய சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் அவரது வெற்றியை கடவுள் உறுதி செய்வார் என்றும் ராதே மா கூறினார். 

ராதே மாவிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் எனினும் 48 மணி நேரத்துக்கு பிறகுதான் இந்த விசாரணை நடக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:
Privacy and cookie settings