சகிப்பின்மை தொடர்பாக தனது விளம்பரத் தூதரான ஆமிர் கான் தெரிவித்த கருத்துக்கள், அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அதற்கும் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்றும் ஸ்னாப்டீல் விளக்கம் அளித்துள்ளது.
நாட்டின் சகிப்பின்மையைப் பற்றி ஆமிர் கான் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் சூடாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில்,
அவர் விளம்பரத் தூதராக இருக்கும் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் செயலியை பலர் தங்களது ஃபோனிலிருந்து அழித்து எதிர்ப்பு தெரிவித்து, அந்தச் செய்தியை பகிர்ந்தும் வருகின்றனர்.
இது பின்னடைவாகக் கருதப்பட்ட நிலையில், விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்ட அந்நிறுவனம், "ஸ்னாப்டீல் நிறுவனத்துக்கும் ஆமிர் கான் தெரிவித்த கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து.
ஸ்னாப்டீல் உணர்பூர்வ இந்திய இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பெருமித இந்திய நிறுவனம்.
அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கவே பாடுபட்டு வருகிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஸ்னாப்டீலை ஆதரிக்கும் பிளிப்கார்ட் நிறுவனர்
சக இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டின் நிறுவனர் சச்சின் பன்ஸால், ஸ்னாப் டீலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
"பிராண்டுகள் விளம்பரத் தூதர்களின் தனிப்பட்ட கருத்துகளை ஆதரிக்கும் என்பது தவறான கருத்து. ஸ்னாப்டீல் இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியதில்லை" என்று கூறியுள்ளார்.
Tags: