பெண்ணிடம் பறித்த தங்க செயினை சாப்பிட்ட திருடன்... பாத்ரூம் வாசலில் போலீஸ்!

ஹைதராபாத்தில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த தங்கச் சங்கிலியை வாயில் போட்டு அப்படியே திருடன் விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 Cops wait for thief to excrete stolen gold
திருடனின் வயிற்றில் இருந்து தங்கச் சங்கிலியை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத் சிலகலகடா பகுதியைச் சேர்ந்த சங்கரய்யா, தனது மனைவி பிரமிளாவுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மாணிக்கேஸ்வரி நகரைச் சேர்ந்த விகாஸ் (22) என்ற இளைஞர், பிரமிளாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றான்.

பிரமிளாவின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் ரோந்து வந்த போலீசார் விகாஸை விரட்டினர். இறுதியில் போலீஸ் பிடியில் சிக்கிய விகாஸ், கண் இமைக்கும் நேரத்தில் திருடிய தங்கச் சங்கிலியை வாயில் போட்டு விழுங்கினார்.

அதனைத் தொடர்ந்து விகாஸை கைது செய்த போலீசார், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ்ரே செய்து பார்த்ததில் விகாஸின் வயிற்றுப் பகுதியில் தங்கச் சங்கிலி இருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை மூலம் அந்தத் தங்கச்சங்கிலியை வெளியே எடுக்குமாறு போலீசார், மருத்துவர்களிடம் கேட்டனர்.

ஆனால், அவர்களோ அவ்வாறு செய்தால், அது விகாஸின் உயிருக்கு ஆபத்தாய் முடியும் என மறுத்து விட்டனர். மேலும், அந்தத் தங்கச் சங்கிலி தானாகவே மலம் மூலமாக வெளியில் வந்து விடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், கடந்த இரண்டு தினங்களாக விகாஸின் மலத்தில் தங்கச் சங்கிலி எப்போது வரும் என போலீஸார் காத்திருக்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings