மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாயார் காலமானார் !

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.

 வைகோ தாயார் மாரியம்மாள் (சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர்) | கோப்புப் படம்.

அவருக்கு வயது 95. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கருணாநிதி வருத்தம்:
 
வைகோ தாயார் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "ம.தி.மு.க. பொதுச் செயலாளர், வைகோவின் தாயார், மாரியம்மாள், தனது 96 வயதில், இயற்கை எய்தினார் என்ற செய்தியினை அறிந்து பெரிதும் வருந்துகிறேன். 

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் கலிங்கப்பட்டி வைகோ இல்லத்திற்குச் சென்றிருந்த போது, என்னைத் தாயுள்ளத்தோடு வரவேற்று மகிழ்ந்தது எனக்கு இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. 

எனது அன்னையாரைப் போலவே வைகோவின் அன்னையாரும் அன்றாட அரசியலைப் புரிந்து கொண்டு வாழ்ந்தவர். குறிப்பாக வைகோவின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும், ஆதரவாகவும், அரவணைப்பாகவும், ஆலோசனை வழங்குபவராகவும் விளங்கியவர் அன்னை மாரியம்மாள். 

அவரது மறைவினால் வாடும் வைகோ, மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

ராமதாஸ் இரங்கல்:
 
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவால் பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். 

பாரம்பரியமிக்க குடும்பத்தின் தலைவியாக திகழ்ந்த மாரியம்மாள் தனது மகன்களின் பொதுவாழ்க்கைக்கு துணையாக இருந்தார். 

கலிங்கப்பட்டி பகுதியில் அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படுபவராகவும், அனைத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் மரியாதைக்குரியவராகவும் திகழ்ந்தவர். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களில் பெரும்பான்மையானோர் நெல்லை மாவட்டத்திற்கு செல்லும் போது அவரை சந்தித்து வாழ்த்து பெறுவது இயல்பாகும். 

தாயார் மாரியம்மாளின் மறைவு நண்பர் வைகோவுக்கும், அவரது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். தாயாரை இழந்து வாரும் வைகோவுக்கும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மதிமுகவினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

வேல்முருகன் இரங்கல்: 

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அண்ணன் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் நம்மைவிட்டு பிரிந்தார் என்ற செய்தி துயரத்தை தருகிறது. 

ஈழத் தமிழர் பிரச்சனை, மதுவிலக்கு போன்ற தமிழினத்தின் வாழ்வுரிமைப் போராட்டங்களில் வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் அன்னை மாரியம்மாள். 

அண்மையில் கூட கலிங்கப்பட்டியில் மதுக்கடையை அகற்றும் கோரிக்கைக்காக தாமே தலைமை வகித்து போராடி பெண்களுக்கு உந்துசக்தியாக இருந்தவர் அன்னை மாரியம்மாள். 

அன்னை மாரியம்மாளை இழந்துவாடும் அண்ணன் வைகோ, அவர்தம் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 
Tags:
Privacy and cookie settings