தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்து, ‘ஸ்டைலிஷ்’ இயக்குநர் என பெயர் எடுத்தவர் இயக்குநர் கெளதம் மேனன். இவர் தற்போது ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் என்னும் மலையாள நடிகை நடிக்கிறார். இதுவரை இந்த படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.. அனேகமாக கைவிடப்பட்டது என்று கூட கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் அடுத்ததாக ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் கெளதம் மேனன் நடிக்கவிருப்பது தமிழில் இல்லையாம், மலையாளத்தில். மலையாளத்தில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவரான வினித் சீனிவாசன் இயக்கும் அடுத்தப் படத்தில் தான் கெளதம் மேனன் நடிக்கிறார்.
மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் மற்றும் தட்டத்தின் மறயத்து போன்ற வெற்றிப் படங்களை நிவின் பாலியுடன் சேர்ந்து கொடுத்த இயக்குநர், அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம்.
இப்படத்தில் நிவின்பாலி மற்றும் கெளதம் மேனனுடன் இணைந்து ,சாய்குமார், லட்சுமி ராமகிருஷ்ணன், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். மலையாளத்தில் கெளதம் நடிக்கவிருக்கும் முதல் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கான அறிவிப்பை வினித் தன்னுடைய பேஸ்புக்கில் எழுதி புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துள்ள வினித் – நிவின் பாலி கூட்டணியில் கெளதம் மேனன் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.