சென்னை மெட்ரோ ரயில் கழக பொறியாளர் கண்ணன், லண்டனில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை செயல்படுத்தியதற்காக 2015க்கான க்ரீன் ஆப்பிள் விருதை (Green Apple Award) பெற உள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தின் செயல்திட்ட பொறியாளரான சித்திரபுத்திரன் கண்ணன், லண்டனில் பச்சை ஆப்பிள் விருதைப் பெற இருக்கிறார். வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில், பாராளுமன்ற அவையில் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கண்ணன், 21 வருடங்கள் பணி அனுபவங்கள் கொண்டவர். தற்போது மணிலா, பிலிப்பைன்ஸில் இருந்து உலக பாதுகாப்பு நிறுவனத்தின் அறிவியல் ஆராய்ச்சிக்கான சாதனை விருதைப் பெற்றுத் திரும்பி இருக்கும் கண்ணனிடம் பேசினோம்.
"விருதுகளை விட, சென்னை மெட்ரோ ரயில் செயல்திட்டம்தான் என்னை அதிகம் பெருமைப்படுத்துகிறது. 14,600 கோடி ரூபாய் செயல்திட்டத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரிவில், துணை முதன்மைப் பொறியாளராகப் பணிபுரிவதுதான் எனக்குப் பெருமை.
பாதுகாப்பு நடைமுறைகள்
டெல்லி மெட்ரோவிலும் நான் பணிபுரிந்திருக்கிறேன். சென்னை மெட்ரோ ரயிலிலும் அவற்றுக்கு இணையான, முறையான பாதுகாப்பு நடைமுறைகளை இதிலும் பின்பற்றுகிறோம்.
மெட்ரோ கழகத்தில் கடந்த ஐந்து வருடங்களில் சில விபத்துகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அவற்றின் எண்ணிக்கையும் தற்போது குறைந்திருக்கிறது. என்ன பிரச்சனையென்றால், நாங்கள் தொழிலாளர்களுக்குப் பயிற்சி கொடுத்து தயார்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் பணியில் நிரந்தரமாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.
இருந்தாலும் பாதுகாப்பு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம். எங்களுடைய ஒப்பந்ததாரர்களை தரச்சான்றிதழ்கள் பெறுவதை வலியுறுத்துவதோடு, அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்துகிறோம். அதைத்தவிர எங்களின் ஒவ்வொரு தளத்திலும் மருத்துவர்கள் ஆம்புலன்சோடு தயார் நிலையில் இருக்கிறார்கள்.
இந்த விருதைப் பெறுவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்த சென்னை மெட்ரோ ரயில் கழகத்துக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறினார்.
சுற்றுப்புறச் சூழலில் கவனிக்கத்தக்க நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு, க்ரீன் ஆப்பிள் விருது வழங்கப்படுகிறது.