‘‘பிஹார் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது நல்ல செய்தி’’ என்று பாகிஸ்தானில் வெளிவரும் நாளிதழ் கூறியுள்ளது.
‘தி நியூஸ் இன்டர்நேஷனல்’ என்ற நாளிதழ் பாகிஸ்தானில் இருந்து வெளிவருகிறது. இந்த நாளிதழ் தனது தலையங்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
கடந்த சில மாதங்களில் இந்தியாவில் இருந்து வந்த செய்திகளில், பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததுதான் நல்ல செய்தி.
வெறுப்புணர்ச்சி அரசியல் நீண்ட நாட்களுக்கு எடுபடாது என்பதை பாஜக.வுக்கு நினைவூட்டும் வகையில் இந்த தேர்தல் தோல்வி அமைந்துள்ளது.
சமீபகாலமாக இந்தியா - பாகிஸ்தான் உறவில் அதிகமாக விரிசல் நிலவுகிறது. காஷ்மீரில் வன்முறை, எல்லைகளில் துப்பாக்கிச் சூடு, மாட்டிறைச்சி மற்றும் முஸ்லிம்களின் பிரச்சினைகள், பாகிஸ்தான் பாடகர்களுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது போன்ற பல காரணங்களால் இரு நாட்டு உறவில் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில் பிஹார் தேர்தல் முடிவுகளை பாகிஸ்தான் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்ததில் வியப்பில்லை. பொருளாதார சீர்த்திருத்தம், வளர்ச்சி என்ற கோஷங்களை முன்வைத்து பாஜக ஆட்சிக்கு வந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே பாஜக தலைமையிலான அரசு நாட்டின் மிக முக்கியமான விஷயங்களை அன்னியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவிட்டது.
மோடியின் தனிப்பட்ட தோல்வி
பிஹார் தேர்தல் முடிவு, வரும் 4 ஆண்டுகளுக்கு பாஜக.வுக்கு எதிரான கூட்டணி அமைய வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது. பிஹார் தேர்தல் தோல்வி, பிரதமர் நரேந்திர மோடியை சுற்றி உருவாக்கி வைக்கப்பட்டுள்ள மாயையை அசைத்துவிட்டது.
உண்மையில் பிஹார் தேர்தல் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தியவர் பிரதமர் மோடிதான். அந்த வகையில் இந்த தோல்வி மோடியின் தனிப்பட்ட தோல்வியாகவே கருதப்படும்.
இவ்வாறு ‘தி நியூஸ் இன்டர்நேஷனல்’ நாளிதழ் தலையங்கத்தில் கூறப்பட்டுள் ளது.