சென்னை மாநகராட்சியில் ஆணையராக இருந்தவர் சுர்ஜித் குமார் சவுதரி. இப்போது மத்திய அரசின் ரசாயனங்கள், உரத் துறையில் செயலர். சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார்.
சென்னை மழையைப் பார்த்தவருக்கு ‘அந்த நாள் ஞாபகம்’ வந்துவிட்டதுபோல. தன் ‘அனுபவங்க’ளை நினைவுகூர்கிறார்.
“வானம் பொத்துக்கொண்டு மழை கொட்டும்போது நான் தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் உள்ள ஜிம்முக்கு வந்துவிடுவேன்.அங்கிருந்து அதிகாரிகளுக்கு நிவாரணப் பணிகளை எங்கெங்கு செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவேன்.
எல்லோரையும் வீதிக்கு வந்து ஆங்காங்கே இருக்குமாறு செய்துவிடுவேன். பார்க்கிறவர்களுக்கு ஏதோ சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்த எல்லோருமே மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைப் போலத் தோன்றும்.
உண்மை என்னவென்றால், எப்பேர்ப்பட்ட வெள்ளமாக இருந்தாலும் நாம் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் இரண்டு நாட்களில் வடிந்துவிடும்!”
இப்படித்தான் சவுதரி பேசியிருக்கிறார். ஆங்கில செய்தித்தாள் ஒன்று அவருடைய உரையை விரிவாக வெளியிட்டிருக்கிறது.
சவுதரி போட்ட இன்னொரு குண்டு
நரேந்திர மோடி அரசின் ரசாயனங்கள், உரத் துறையில் செயலராக சவுதரி இப்போது இருக்கிறார் அல்லவா, அந்தத் துறை சம்பந்தமாக அன்னார் உதிர்த்த வார்த்தைகள் இவை.
“மத்திய அரசில் ரசாயனங்கள், உரம் ஆகிய துறையின் செயலாளராகப் பதவி வகித்தாலும், ரசாயனங்கள் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது!”
நாடும் மக்களும் நன்றாகவே விளங்கிவிடுவார்கள்!