ஆர்கேவி ஸ்டுடியோ எனும் அந்த பிரிவியூ திரையரங்கம் நேற்று நிரம்பி வழிந்தது. வந்தவர் கேப்டன்... நிகழ்ச்சி அவரது புதிய படமான தமிழன் என்று சொல்.
நிகழ்ச்சிக்கு அழைப்பில்லாமலேயே அவரது பலநூறு தொண்டர்கள் திரண்டிருந்தனர். தயாரிப்பாளர் கவுன்சிலர் கட்டுப்பாடுகளைத் தாண்டி மொத்த செய்தியாளர்களும் வந்திருந்தனர்.
விஜயகாந்த் பட பிரஸ்மீட்டில் குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள்தான் பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்க தயாரிப்பாளர் சங்கத்தால் முடியுமா என்ன! ஏராளமான டிவி கேமராக்கள்... படப்பூஜை முடிந்ததும், விஜயகாந்த் மைக் பிடித்தார்.
செம கலகல மூடிலிருந்தார் கேப்டன். பத்திரிகையாளர்கள், அவரது நிறுவனங்களின் 'கொள்கைகளை' ஏகத்துக்கும் ஓட்டினார். அவரது ஜாலி மூடைக் கெடுக்க வேண்டாமே என்று நினைத்தார்களோ என்னமோ.. யாரும் பெரிதாகக் கேள்வி கேட்கவில்லை.
இந்தப் படத்தை ஒப்புக் கொண்டது குறித்து விஜய்காந்த் கூறுகையில், "படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். 'தமிழன் என்று சொல்' படத்தின் கதையைக் கேட்டேன். மனைவியும், பெரிய பையனும் இக்கதையைக் கேட்டுவிட்டு, இப்படத்தில் நடிங்க நடிங்கன்னு சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
உடனே தான் இயக்குநரை அழைத்து கதையைக் கேட்டேன். சண்முக பாண்டியன் நடிக்கிறான் என்பதைத் தாண்டி, தமிழ் மொழி சம்பந்தப்பட்ட படம் என்பதால் ஒப்புக் கொண்டேன். இயக்குநர் சொன்ன கதையில் ஒரு வெறி இருந்தது.
உடனே நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டேன். மனைவியும், பெரிய மகனும் கதை எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். 'நானே மக்கள் பணி என்று போய்க் கொண்டிருக்கிறேன்டா.. எதுக்கு படமெல்லாம்?' என்று சொன்னேன். அவங்க கேக்கல... 'நீங்க நடிக்கிறீங்க' என்று பெரிய பையன் சொல்லிட்டான்.
மகன் சொல்லிவிட்டான், தமிழ் மொழிக்கான படம் வேறு... உடனே இயக்குநரிடம் 'ஏம்பா.. தமிழ்நாட்டில் வேறு நடிகர்களே இல்லயா'ன்னு கேட்டேன். இயக்குநரும் 'இல்ல.. நீங்கதான் நடிக்கணும்னு' பிடிவாதமா இருந்தார்.
சரி கண்டிப்பாக பண்றேன்னு சொல்லிட்டேன். படத்தோட புரொட்யூசல் புதுசுன்னு நினைக்காதீங்க. அவரை 30 ஆண்டு காலமாக தெரியும்.
விஜயகாந்த் ஏதோ கத்தி எல்லாம் வைத்திருக்கிறார் (படத்தில்) என்று நினைத்துவிடாதீர்கள். நிச்சயமாக சொல்வேன், இப்படம் ஒரு மாறுபட்ட படம். தமிழ் மொழிக்காக நான் செய்கிற படம் 'தமிழன் என்று சொல்', என்றார்.
விஜய்காந்த் கிளம்பிப் போன பிறகும், படத்தின் இன்னொரு ஹீரோவான சின்ன கேப்டனை (அவர்தாங்க சண்முகப் பாண்டியன்) வாழ்த்தவும் பொக்கே கொடுக்கவும் பெருங்கூட்டம் அவர் பின்னாலேயே ஓடிக் கொண்டிருந்தது.