'வேதாளம்' ட்ரெய்லர் வெளியிடாததற்கு நேரமின்மை மட்டுமே காரணம் என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சிவா.
எந்தவித பாரபட்சமும் பார்க்கவில்லை. எனக்கு எப்படியாவது படத்தை தீபாவளிக்கு கொண்டுவர வேண்டும் அவ்வளவு தான். அதில் தான் எனது முழு கவனமும் இருந்தது.
சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், கபீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வேதாளம்'. அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.
படம் நவம்பர் 10ம் தேதி தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல் டீஸர் வெளியானதே தவிர ட்ரெய்லர் வெளியாகவில்லை.
பல முறை இன்று ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழு முறைப்படி அதை அறிவித்து, வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார்கள்.
ட்ரெய்லர் வெளியிடாதது ஏன் என்பது குறித்து இயக்குநர் சிவா கூறும்போது, "ட்ரெய்லர் வரவில்லை என என் மீது கோபமாக இருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் புரிந்து கொள்வார்கள். ஐந்தரை மாதத்தில் ஒரு பிரம்மாண்ட தயாரிப்பு படத்தை எடுத்திருக்கிறோம்.
150 நாட்களில் 107 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். அதன் பிறகு, நான் எப்போது டப்பிங் பண்ணியிருப்பேன், எடிட்டிங் பண்ணியிருப்பேன் உள்ளிட்ட விஷயங்களை யோசிக்கும் போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது.
படப்பிடிப்பு முடித்துவிட்டு அப்படியே போய் எடிட்டிங் பண்ணியிருக்கிறேன், டப்பிங் பண்ணியிருக்கிறேன். எனது மனைவியே 'ஏன் இப்படி உழைக்கிறீர்கள்?' என திட்டினார். வேலைப் பளு அதிகமாக இருந்தது.
எந்தவித பாரபட்சமும் பார்க்கவில்லை. எனக்கு எப்படியாவது படத்தை தீபாவளிக்கு கொண்டுவர வேண்டும் அவ்வளவு தான். அதில் தான் எனது முழு கவனமும் இருந்தது.
இடைப்பட்ட நேரத்தில் டீஸர், பாடல் டீஸர் வெளியிட்டிருக்கிறோம். படம் பார்க்கும் போது ஏன் ட்ரெய்லர் வெளியிடவில்லை எனத் தெரிந்து கொள்வார்கள். ட்ரெய்லர் வெளியிடாததற்கு நேரமின்மை மட்டுமே காரணம்" என்று தெரிவித்திருக்கிறார்.