'விஷால் அணியின் ஜாதி, பண அரசியல்.. இது நல்லதுக்கில்ல.. ராதாரவி !

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் ஜாதி, பண அரசியலைப் புகுத்துகின்றனர். இது நல்லதற்கல்ல, என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி குற்றம்சாட்டினார்.. நடிகர் சங்கத் தேர்தல் வரும் அக்டோபர் 18ம் தேதி நடக்கிறது.
 Radharavi accused Vishal and team for their 'caste & money politics'
இந்தத் தேர்தலில் இப்போதைய நிர்வாகிகளாக உள்ள சரத்குமார் - ராதாரவி ஒரு அணியாகவும், அவர்களை எதிர்த்து பாண்டவர் அணி என்ற பெயரில் விஷால் - நாசர் உள்ளிட்டோர் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றனர்.

இரு அணியினரும் எப்படியாவது சங்கத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் பெரும் வேகம் காட்டி வருகின்றனர். விஷால் அணிக்கு கமல் ஹாஸன் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது, சரத்குமார் அணியை கடும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

கமல் ஹாஸன் சொல்லித்தான் விஷால் அணி இப்படியெல்லாம் நடக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார் சரத்குமார். இந்த நிலையில் சரத்குமார் அணியின் முக்கிய பொறுப்பாளரான ராதாரவி நம்மிடம் கூறுகையில், "பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் எதிர்த் தரப்பினர்.

இதிலிருந்தே அவர்களின் நோக்கம் உங்களுக்குத் தெரியும். மிகத் தவறான அணுகுமுறை. இதைவிட ஆபத்து, ஜாதி பாலிடிக்ஸ். இதுவரை நடிகர் சங்க தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஜாதி அரசியலைத் தூண்டிவிட்டு வேலைப் பார்க்கிறார்கள்.

நடிகர் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி சங்க தேர்தலை போர்க்களமாக மாற்ற, விஷால் அணியினர் முயற்சிக்கின்றனர். விஷாலும் அவரது அணியினரும் இதுவரை எங்களைப் பற்றிச் சொன்னதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகள். ஆதாரம் இருந்தா நிரூபிச்சிக் காட்டுங்கப்பான்னு சொல்றேன். ம்ஹூம்...
இன்னிக்கு வரைக்கும் முடியலியே. இவங்க சொன்ன ஒரு வாக்குறுதியை, அதாவது நாடக நடிகர்களுக்கு நிலம் வாங்கித் தருவது.. ஏங்கண்ணு.... இவங்க சொல்ற பொய்க்கு ஒரு வரைமுறையே வேணாமா...

அதை இவங்களால உடனே செஞ்சிட முடியுமா.. அதுக்குத்தான் நாங்க ஒரு திட்டம் போட்டு வச்சோம். ஆனா இவங்க, உடனடியா நிலம் வாங்கித் தர்றதா சொல்றாங்க. முடிஞ்சா அதை உடனடியா செஞ்சி காட்டட்டுமே..

நான் போட்டியிலிருந்தே கூட விலகிக்கிறேன். சும்மா வாய்க்கு வந்ததையெல்லாம் அடிச்சி விடக்கூடாது. இத்தனை காலமும் நடிகர் சங்கத் தேர்தல் கண்ணியமாகவும் கவுரவமாகவும் நடந்து வந்தது. திரையுலகின் எந்த அமைப்பும் இதை கேலியாகப் பார்த்ததில்லை.

ஆனால் விஷால் அணி, இன்றைக்கு நடிகர் சங்கத் தேர்தலை கோர்ட்டுக்கு இழுத்து, அரசியலாக்கி, சாதி ரீதியில் பிளவுபடுத்தி முச்சந்திக்குக் கொண்டு வந்து விட்டது. நாலு பய ஒண்ணா சேர்ந்தா இப்போ நடிகர் சங்க அரசியல் பத்திப் பேசுறான்... இப்படி ஒரு நிலை தேவையா... நடிகர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சங்கம் இது.

ஆனால் தங்களின் தனிப்பட்ட லாபங்களைக் கணக்குப் போட்டு விஷால் குழு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒருவரும் பலியாகிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த ராதாரவி கொஞ்சம் கோபமா பேசுவான்தான். ஆனால் என் கோபத்தில் நியாயம் இருக்கும்.

இன்று வரை திரையுலகில் ஒரு பிரச்சினை என்றால் தேடிப் போய் அதைத் தீர்த்து வைத்தவர் இப்போதைய தலைவர் சரத்குமார்தான். அதை எங்கும் விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடியதில்லை.

எந்த யூனியனில், சங்கத்தில் பிரச்சினை என்றாலும் அதை ஊதிப் பெரிதாக்காமல் சரி செய்வது எங்கள் பாணி. நாங்கள் பார்க்காத அரசியலா? ஆனால், நடிகர் சங்கத்தில், திரையுலகில் எந்த அரசியலும் இருக்கக் கூடாது என்று விரும்புபவன் நான்.
இந்த தேர்தலில் பாண்டவர் அணி என்று சொல்லிக் கொண்டு, பிரச்சாரம் செய்கிறார்கள். அப்படியெனில் யாரை கவுவர், துரியோதனைப் படை என்கிறீர்கள்? திரையுலக நன்மைக்காக பாடுபட்ட எங்களையா? நன்றி மறந்துவிட வேண்டாம்.

இதே விஷாலுக்கும், அவரை ஆதரிக்கும் கமல் ஹாஸனுக்கும் பிரச்சினை கழுத்தைப் பிடித்து இறுக்கியபோது, நாங்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவர்கள் பிரச்சினை தீர உதவினோமே...

அப்படிப்பட்ட நாங்கள் துரியோதனப் படையா? மனசாட்சியோடுதான் பேசுகிறீர்களா தம்பி... நண்பர்களே... இது ஒரு பெரிய சதி. இந்த சதிக்கு துணை போகாதீர்கள். அவ்வளவுதான் சொல்வேன்," என்றார்.
Tags:
Privacy and cookie settings