அந்நிய முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பல சீர்த்திருத்தங்கள் செய்யப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அடுத்த வருடம் அமல்படுத்தப்படும் என்றும்
சிங்கப்பூரில் நடந்த இந்திய சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி படக் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது,
கடந்த 18 மாதங்களில் பொரு ளாதாரம் வேகம் எடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல சீர்த்திருத்தங்கள் எடுக்கப்பட்டன.
இப்போது இறுதி கட்டத்தில் இருக்கிறோம். சீர்த்திருத்தங்கள் இப்போது செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. மக்களின் கனவுகளை செயல் படுத்துவதற்காக இவை உருவாக் கப்பட்டன.
புதிதாக மத்திய அரசு பொறுப்பேற்றவுடனே அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வந்தன.
சமீபத்தில் அந்நிய நேரடி முதலீட்டில் செய்யப்பட்ட சீர்த்திருத்தங்களால் திறந்த பொருளாதார கொள்கைகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் இருக்கிறது.
நாங்கள் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அந்த விதிமுறைகளில் சிறிய மாற்றங்களை செய்து வருகிறோம்.
தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக் கையும் எடுத்து வருகிறோம். அதற்கான சூழல் மேம்பட்டு வருகிறது.
2016-ம் ஆண்டுக்குள் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தி விடுவோம். கம்பெனி சட்ட தீர்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அந்நிய நேரடி முதலீடு 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தவிர அந்நிய நேரடி முதலீட்டுக்கான உத்திரவாதங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வரி மற்றும் ஒழுங்குமுறை சம்பந்தமாக 14 நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
கட்டுபடியாகும் வீடுகள், ஸ்மார்ட் நகரங்கள், ரயில்வே, மரபு சாரா எரிசக்தி என பல துறைகளில் வாய்ப்புகள் உள்ளன.
உங்களை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள், உங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
இந்த இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மிகவும் சாதகமாகவும், உபயோகமாகவும் உள்ளது. பல சிங்கப்பூர் தலைவர்களை சந்தித்தேன். இதனால் இரு நாட்டு உறவும் அடுத்த நிலைக்கு உயரும்.
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான உறவில் பொருளாதார உறவு முக்கியமானதாகும். இந்தியாவில் செயல்படும் பல நிறுவனங்கள் சிங்கப்பூரில் தொடங்கப் பட்டவையாகும்.
இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடுகளில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதே போல இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் முதலீடுகளும் உயர்ந்து கொண்டே வருகின்றன.
ஆந்திரபிரதேசத்தின் புதிய தலைநகரம் அமராவதி மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தின் புதிய முனையம் ஆகியவற்றில் இந்தியா சிங்கப்பூர் இடையே கூட்டு ஏற்பட்டுள்ளது.
இன்னும் மேலும் பல புதிய கூட்டணிகள் உருவாக வேண்டும். இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து பணிபுரியலாம் என்றார்.