சக்தி செளந்தர் ராஜன் இயகக்த்தில் ஜெயம் ரவி நடித்துவரும் 'மிருதன்' திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் படம் 'மிருதன்'. லட்சுமி மேனன் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை சக்தி செளந்தர் ராஜன் இயக்கி வருகிறார். இமான் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.
ஊட்டியில் தொடங்கப்பட்டது முதற்கட்ட படப்பிடிப்பு. அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.
தமிழ் திரையுலகில் தயாராகும் முதல் ஜாம்பி (zombie) வகையிலான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே 'கதகளி', 'அரண்மனை 2', 'தாரை தப்பட்டை' ஆகிய படங்கள் தங்களது வெளியீட்டை பொங்கலுக்கு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து 'மிருதன்' வெளியீடும் உறுதியாகி இருக்கிறது.