என்னை மாற்றிய பெண்! - லட்சுமி ராமகிருஷ்ணன் !

‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தின் மூலம் தமிழில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அறிமுகமாகி வலம் வரத்தொடங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன். ‘யுத்தம் செய்’ படத்தில் கவனிக்க வைத்தார். 
 
அம்மா நடிகை என்ற அளவுகோலுடன் சுருங்கிவிடாமல் ‘ஆரோகணம்’ படத்தின் மூலம் இயக்குநராக இடம் மாறினாலும் நடிப்பையும் விடாமல் தொடரும் இவர், தற்போது ‘அம்மணி’என்ற தனது மூன்றாவது படத்தை, எழுதி, இயக்கி நடித்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து... 

நாற்பது வயதுக்குப் பிறகு திரையில் நுழைந்து எப்படி ஜெயிக்க முடிந்தது? 

எனது பெற்றோரும் கணவரும்தான் என் வெற்றியின் பின்னால் இருப்பவர்கள். நாங்கள் பாலக்காட்டில் செட்டிலான தமிழ்க் குடும்பம். எனது அப்பா, பி.கே. கிருஷ்ணசுவாமி ஒரு விவசாயி, கல்வியாளர், முழு நேர அரசியல்வாதி, சமுகப் போராளி என அவரது பலமுகங்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். 

எனக்கு ஒரு அண்ணன். நான்கு அக்காள்கள். நான்தான் கடைக்குட்டி. அப்பா சுதந்திரா கட்சியில் இருந்தார். அரசியல், விவசாயம் தொடங்கி எல்லாவற்றிலும் அம்மாவை நேரடியாகப் பங்கெடுக்கச் செய்தார். 

சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே இருவரும் சொல்லிக்கொடுத்து வளர்த்தார்கள். எங்கள் வீட்டில் பெண் பிள்ளைகளுக்குச் சமமான முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தார்கள். 

நான் என்னவாக ஆக வேண்டும் என்று நினைப்பதற்கு முன்பே எனக்குத் திருமணமாகிவிட்டது. திருமணமாகிச் சென்றது ஒரு ஆச்சாரமான குடும்பம். கணவர் வீட்டில் அனைவரும் நன்கு படித்தவர்கள். 

ஆனால் அன்று பெண்களுக்கு சுதந்திரம் தருவதில் உடன்பாடு இல்லாதவர்களாக இருந்தார்கள். பெண் என்பவள் வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள மட்டுமே படைக்கப்பட்டவள் என்ற பார்வைதான் அவர்களிடம் இருந்தது. 

இந்தக் காரணத்துக்காவே நான் எனது குழந்தைகளுடன் கணவர் வேலை செய்துவந்த மஸ்கட் நாட்டுக்குச் சென்று செட்டில் ஆனேன். வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. 

அங்கே ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமொன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினேன். குழந்தைகள் வளர்ந்த பிறகு ஓய்வுபெறும் வயதும் நெருங்கியதால் நாடு திரும்பினோம். 

சென்னையில் குடியேறிய பிறகு குழந்தைகளை ஆளாக்கியதைத் தவிர வேறு எதையும் நாம் பெரிதாக சாதிக்கவில்லையே என்று நினைத்தேன். வாய்ப்புகள் எங்கே இருக்கின்றன என்று தேட ஆரம்பித்தேன். தேடல் என்றால் கடுமையாக, இடைவிடாமல் முயற்சித்தேன். 

‘சினிமாவுக்கு நடிக்கப்போறேன்னு குடும்ப நிர்வாகத்தை விட்டுட்டா பாரு’ என்று யாரும் சொல்லிவிடக் கூடாதே என்று அதையும் துல்லியமாக திட்டமிட்டுப் பார்த்துக்கொண்டேதான் வாய்ப்புகளைத் தேடிப் பிடித்தேன். 

அந்த நேரத்தில் “ எதற்குத் தேவையில்லாமல் இதையெல்லாம் செய்கிறாய்?” என்று எனது கணவர் என்றும் சொன்னதில்லை. அவர் கொடுத்த உற்சாகத்தாலும் ஊக்குவிப்பாலும்தான் நான் ஒரு நடிகையாக, இயக்குநராக இன்று அடையாளம் பெற்றிருக்கிறேன். 

படங்களை இயக்க சினிமாவில் நடித்த அனுபவமே போதுமானதாக இருந்ததா? 

கண்டிப்பாகப் போதாது. நான் மூன்று படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் ஒரு அமெச்சூர் பிலிம் மேக்கர்தான். திரைப்பட இயக்கத்தை நான் கற்றுக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். 
 
எனது படமான ஆரோகணத்தில் பல குறைகள் இருந்தன. ஆனால், அதில் இருந்த குறைகளைவிட நல்ல விஷயங்கள் பெரிதாக இருந்ததால் குறைகளை யாரும் பெரிதுபடுத்தவில்லை அவ்வளவுதான். 

உங்கள் இரண்டாவது படத்தை ஒரு வணிகப் படம்போல எடுக்க என்ன காரணம்? 
 

பெண்களின் பிரச்சினைகளை மட்டும்தான் இவர் படமாக எடுப்பார் என்று முத்திரை விழுந்துவிட்டால் பிறகு நீங்கள் பெண்களின் பிரச்சினைகளைக் கூட படமாக்க முடியாது. எனவே, எல்லோரும் பார்க்கிறமாதிரியான படத்தில் பெண்களின் பிரச்சினைகளை வையுங்கள் என்று எனது நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். 

 எனவே தான் ஒரு ரோட் மூவியாக அதை முயற்சித்தேன். அதில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். முக்கியமாக ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். 

அந்தப் படத்தின் ஃபைனல் எடிட்டிங் வெர்சன் செய்யாமலேயே அதை ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது. ரிலீஸ் தேதியை அறிவிக்கும் முன்பு படத்தைப் பலமுறை எடிட் செய்து செதுக்க வேண்டும் என்பதையே அப்போதுதான் தெரிந்துகொண்டேன். 

சக இயக்குநர்களுடன் நான் பழகாமல் போனதுதான் இதற்குக் காரணம். எடிட்டிங்கில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதைத் இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். 

தற்போது இயக்கி முடித்திருக்கும் ‘அம்மணி’படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது 80 வயது பாட்டிதான் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம்போல் தெரிகிறதே? 

நான் லீட் ரோல் செய்திருக்கிறேன். கதையில் அவருக்கும் முக்கிய பங்கிருக்கிறது. ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தபோது ஒரு முதிய பெண்மணியைச் சந்தித்தேன். 

அவர்தான் இந்தக் கதையை எழுத இன்ஸ்பிரேஷனாக இருந்தார். அவரைச் சந்தித்த பிறகு வாழ்க்கை மீதிருந்த என் பார்வையே மாறிப்போய்விட்டது என்று சொல்ல வேண்டும். அம்மணி என்னை மாற்றிய பெண் என்று சொல்வேன். 

நான் மாறியதுபோல இந்தப் படத்தைப் பார்க்கக் காத்திருக்கும் பல பேரின் பார்வையும் வாழ்க்கையும் மாறும் என்று நான் நம்புகிறேன். இது புதுக்கதையெல்லாம் கிடையாது. 
 
ஆனால், அம்மணி வாழ்க்கையை அணுகியவிதம் எப்படிப்பட்டது என்ற உண்மைக் கதை. சமூகத்தில் இருக்கும் பிரச்சினையைத்தான் சொல்லியிருக்கிறேன். அந்தப் பிரச்சினைக்குக் காரணமானவர்களைப் பற்றி இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். 

ஆனால், அந்தப் பிரச்சினைக்கு அவர்கள் மட்டுமே காரணமில்லை, இரண்டாவதாக ஒரு தரப்பு இருக்கிறது என்பதைக் காணும்போது பார்வையாளர்களுக்கு அது எதிர்பாராத அதிர்ச்சியாக இருக்கும். 

நீங்கள் கூறுவதைப் பார்த்தால் இது கருத்து சொல்லும் படம்போல் தெரிகிறதே? 

வறட்டுத்தனமாகக் கருத்து கூறும் திரைப்படங்கள் நமக்குத் தேவையில்லை. அம்மணி வருகிற ஒவ்வொரு காட்சியிலும் விசில் பறக்கும். அவர் நாயக பிம்பத்தோடும் இருக்க மாட்டார். பார்வையாளர்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே அவர்களை ஆக்கிரமித்துக்கொள்வார். 

அத்தனை ஃபீல்குட் கேரக்டர். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் என்னுடன் நடித்திருந்த 82 வயது சுப்புலட்சுமிதான் அம்மணியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து எனது படங்களுக்கு இசையமைத்துவரும் கே இந்தப் படத்திலும் அற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். 

அம்மணி கதையைக் கேட்டதும் இந்தப் படத்தை நான் எனது முதல் படமாகத் தயாரிக்க விரும்புகிறேன் என்று முன்வந்து தனது டேக் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார் வெண். கோவிந்தா.
Tags:
Privacy and cookie settings