வேதாளம்' படத்துக்குக் கிடைத்த வரவேற்புத் தொடர்ந்து மீண்டும் அஜித் -சிவா இணைய திட்டமிட்டு இருக்கிறார்கள். சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன்,
லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'வேதாளம்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.
தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசூலில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் பண்ணாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இந்நிலையில், நவம்பர் 26ம் தேதி காலில் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார் அஜித்.
அறுவை சிகிச்சைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சென்னையில் ஒய்வு எடுத்துவிட்டு, பிறகு லண்டன் செல்லவிருக்கிறார். அஜித்தின் அடுத்த படம் என்பது ஜூன் 2016ல் தான் துவங்கும் எனத் தெரிகிறது.
இப்படத்தின் இயக்குநர் சிவா தான் என்கிறார்கள் அஜித்துக்கு நெருக்கமானவர்கள். 'வேதாளம்' படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மட்டுமன்றி படப்பிடிப்பு தளத்தில் சிவா நடந்து கொள்ளும் விதம் மற்றும் அவருடைய கதை களங்கள் ஆகியவை அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டது.
'வேதாளம்' படத்தின் முதல் பிரதி பார்த்தவுடனே, "மீண்டும் நாம் ஒரு படம் பண்ணலாம் சிவா" என்று கேட்டிருக்கிறார் அஜித். சில நாட்கள் ஒய்விற்கு பிறகு, மீண்டும் அஜித்துக்காக கதை எழுத இருக்கிறார் சிவா.