பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின், கார் பதிவு எண் வாகன விதிமுறைகளுக்கு மாறாக எழுதப்பட்டிருந்ததால், அவருக்கு ஹைதராபாத் போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நேற்று முன் தினம் திங்கள்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சாலை எண் 10-ல் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாகன தணிக்கையில் இருந்த போக்குவரத்து காவல் துறையினர், சானியா மிர்சாவின் காரை நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டனர்.
அப்போது சானியாவும் காரில் இருந்துள்ளார். ஆனால் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளதை போன்று காரின் நம்பர் பிளேட்டில் எண் எழுதாத காரணத்தால் அவருக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.
சானியா மிர்சாவின் கார் ஆவணத்தில் TS 09 EG 0001 என உள்ளது. ஆனால் நம்பர் பிளேட்டில் TS 09 EG 1 என எழுதப்பட்டிருந்தது. இதன் காரணத்தால் வாகன விதி முறைகளை மீறியதாக சானியா மிர்சாவுக்கு அபராதம் விதித்ததாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்தனர்.